கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது... எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு


கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது... எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 16 May 2023 6:12 AM GMT (Updated: 16 May 2023 7:38 AM GMT)

எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் 40க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது; 2 ஆண்டுகளில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கள்ளச்சாராயம் தடையின்றி நடைபெற்று வருகிறது. தற்போது சம்பவம் நடைபெற்றவுடன் இரண்டே நாட்களில் சுமார் 1,600 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

போலி மதுபான, கள்ளச்சாராய விற்பனை காவல்துறைக்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கள்ளச்சாராய விற்பனையை தடுக்க அரசும், போலீசும் தவறிவிட்டதால், பல உயிர்களை இழந்துள்ளோம். விலைமதிக்க முடியாத உயிர்களை இழந்து குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதற்கு யார் பொறுப்பேற்பது..

ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள், அரசியல் பின்புலம் உள்ளவர்கள் விற்பனை செய்த கள்ளச்சாராயத்தால் உயிர்பலி ஏற்பட்டுள்ளது. நாங்கள் பதவியேற்றால் தேனாறும், பாலாறும் ஓடும் என்றார்கள்.. தற்போது தமிழகத்தில் சாராய ஆறு தான் ஓடுகிறது.

ஆளுங்கட்சியின் அதிகார பலத்தோடு விற்பனை நடைபெற்று வருகிறது. நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லாதவராக முதல் அமைச்சர் உள்ளார்.

அரசின் மெத்தனத்தால் பல உயிர்கள் போயுள்ளது. கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல் அமைச்சர் தனது பதவியில் இருந்து விலகவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



Next Story