சமூக நீதி பேச தி.மு.கவிற்கு எந்த உரிமையும் இல்லை - வானதி சீனிவாசன்


சமூக நீதி பேச தி.மு.கவிற்கு எந்த உரிமையும் இல்லை - வானதி சீனிவாசன்
x

மத்தியப்பிரதேசத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மோகன் யாதவ் முதல்-அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

பாஜகவைப் பின்பற்றி தமிழ்நாட்டில் பட்டியலினத்தைச் சேர்ந்தவரையும், பெண் ஒருவரையும் துணை முதலமைச்சராக்க வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

சமீபத்தில் நடந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கரில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. சத்தீஸ்கரில் பழங்குடியினத்தைச் சேர்ந்த விஷ்ணு தியோ சாய், மத்தியப்பிரதேசத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மோகன் யாதவ் ஆகியோர் முதல்-அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தானில் பட்டியலினத்தைச் சேர்ந்த பிரேம்சந்த் பைரவா, மத்தியப்பிரதேசத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் தேவ்தா ஆகியோர் துணை முதலமைச்சர்களாக தேர்வாகியுள்ளனர். ஒடுக்கப்பட்ட மக்கள் அவர்களுக்கு தேவையானதை அவர்களே செய்து கொள்ள அரசியல் அதிகாரம் வழங்குவதுதான் உண்மையான சமூக நீதி. அதைத்தான் பாஜக செய்திருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 12 பட்டியலினத்தவர், 8 பழங்குடியினர், 27 பிற்படுத்தப்பட்டோர், 11 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 76 ஆண்டு கால சுதந்திர வரலாற்றில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மற்றும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் மத்திய அமைச்சரவை இதுதான். இது மட்டுமல்ல, நமது அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்குப் பிறகு, பட்டியலினத்தைச் சேர்ந்த அர்ஜுன்ராம் மேக்வாலை, மத்திய சட்ட அமைச்சராக்கியிருக்கிறார் பிரதமர் மோடி. இதுதான் சமூக நீதி அரசு.

ஆனால், சமூக நீதி, சம நீதி, சமத்துவம், ஜனநாயகம், பெண்ணுரிமை பேசும் திமுக அமைச்சரவையில், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு எந்த முக்கிய துறைகளும் இல்லை. 35 பேர் கொண்ட அமைச்சரவையில் இருவர் மட்டுமே பெண்கள். வாரிசு அரசியல், ஊழலில் திளைக்கும் திமுகவுக்கு இனி சமூக நீதி பற்றி பேச எந்த உரிமையும் இல்லை. அமைச்சராக உள்ள மகன் உதயநிதியை, துணை முதல்-அமைச்சராக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக அவ்வப்போது ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.

பாஜகவைப் பின்பற்றி தமிழ்நாட்டில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரையும், பெண் ஒருவரையும் துணை முதல்-அமைச்சராக்க வேண்டும். அவர்களுக்கு உள்துறை, நிதி, பொதுப்பணி, வருவாய், தொழில், உயர் கல்வி, பள்ளிக் கல்வி, சுகாதாரம் போன்ற முக்கியத் துறைகளை ஒதுக்க வேண்டும். இனியாவது வாய்ச் சொல்லில் வீரம் காட்டாமல், சமூக நீதியை செயலில் காட்டுங்கள், என்று கூறியுள்ளார்.


Next Story