தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் மீது மக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்துவார்கள்


தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் மீது மக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்துவார்கள்
x

தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் மீது மக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்துவார்கள் என்று கூறினார்.

புதுக்கோட்டை


புதுக்கோட்டை மாவட்டம், கடியாப்பட்டியில் நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகிகளோடு ஆலோசனை கூட்டம் நடத்திய பின்னர் வேட்பாளர் அறிவிக்கப்படும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை. போட்டியிடுவேனா என்பது கூட கேள்வி குறிதான். இப்போது உள்ள நடைமுறையை பார்த்தால் இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க.விற்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பது போல் தெரியவில்லை. அ.தி.மு.க. இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டதற்கு டெல்லி மேலிடம் தான் காரணம். மீண்டும் அ.தி.மு.க. ஒன்று சேர்வது அவர்கள் நினைத்தால் மட்டுமே முடியும். என்ன நடப்பது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அமைச்சர் நாசரின் செயல்பாடுதான் திராவிட மாடல் ஆட்சியின் வெளிப்பாடாக உள்ளது. மீண்டும் அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கும் முயற்சியாக பா.ஜ.க. தலைமை என்னை அழைத்தால் அப்போது அது குறித்து நான் முடிவெடுப்பேன். தி.மு.க. கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அப்படித்தான் கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிய தி.மு.க. இதுவரை நடவடிக்கை எடுக்காதது, முன்னாள் அமைச்சர்களின் ஊழல் குறித்த விசாரணை கிடப்பில் போட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. பா.ஜ.க. வளர்ந்து வருகிறது என்று சொல்ல முடியாது. ஒரு கட்சி வளர்வது மக்களின் கையில் தான் உள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடுவது தொடர்பாக கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. சட்டமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி செய்த தவறுகளால் தான் தி.மு.க. ஆட்சி அமைத்துள்ளது. கமல்ஹாசன் ஏற்கனவே காங்கிரசுடன் செல்வதற்கு முடிவெடுத்துவிட்டார். அதனால் தான் ராகுல் காந்தி நடை பயணத்தில் கலந்து கொண்டார். தற்போது அதை உறுதி செய்யும் வகையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் மீது மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

ஆலங்குடியில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி பேசினார்.


Next Story