டி.என்.ஏ. பரிசோதனைக்காக 8 பேரிடம் ரத்த மாதிரி சேகரிப்பு


டி.என்.ஏ. பரிசோதனைக்காக 8 பேரிடம் ரத்த மாதிரி சேகரிப்பு
x

வேங்கைவயல் வழக்கில் கோர்ட்டு உத்தரவுப்படி டி.என்.ஏ. பரிசோதனைக்காக 3 பெண்கள் உள்பட 8 பேரிடம் ரத்த மாதிரி சேகரிப்பு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை

டி.என்.ஏ. பரிசோதனை

புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் 13 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனையும், 2 பேரிடம் குரல் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவு அறிக்கை இன்னும் வரவில்லை.

இதற்கிடையில் முதற்கட்டமாக நடந்த டி.என்.ஏ. பரிசோதனையின் போது வேங்கைவயலை சோ்ந்த 3 பெண்கள் உள்பட 8 பேர் வர மறுப்பு தெரிவித்தனர். மேலும் மதுரை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த நிலையில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேரிடம் பரிசோதனை நடத்த அனுமதி கோரி புதுக்கோட்டை கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் கோர்ட்டு 8 பேரையும் டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ள உத்தரவிட்டதோடு, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரத்த மாதிரி சேகரிப்பு நடத்தவும் அறிவுறுத்தியது.

ரத்த மாதிரி சேகரிப்பு

இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவுபடி வேங்கைவயலை சேர்ந்த இளையரசி (வயது 23), ஜீவானந்தம் (65), ஜானகி (60), சுபா (30), பிரபாகரன் (32), சுதர்சன் (21), முத்துக்கிருஷ்ணன் (22), கண்ணதாசன் (32) ஆகிய 8 பேர் டி.என்.ஏ. பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று காலை வந்தனர். முதலில் அவர்களது உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டது.

அதன்பின் 8 பேரிடம் தனித்தனியாக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. இந்த ரத்த மாதிரி சேகரிப்பு நடந்த போது ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை என மருத்துவ துறையினர் எழுத்துப்பூர்வமான கடிதத்தில் 8 பேரிடம் கையெழுத்திட கூறினர். ஆனால் அவர்கள் கையெழுத்திட மறுத்தனர். இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, போலீஸ் தரப்பில் இருந்து கோர்ட்டில் தெரிவிக்கப்பட வேண்டிய தகவலுக்கான படிவம் தான் என தெரிவித்தனர். அதன்பின் அவர்கள் சமாதானமடைந்தனர்.

தடயவியல் அறிவியல் ஆய்வகம்

8 பேரிடம் சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரியை புதுக்கோட்டை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட கோர்ட்டில் ஒப்படைக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்தனர். மேலும் சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள் சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பின் அங்கிருந்து பரிசோதனை முடிவுகள் வரும்.

இந்த வழக்கில் குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட அசுத்தத்தின் மாதிரி சேகரிக்கப்பட்டு தடயவியல் அறிவியல் ஆய்வகம் மூலம் அறிக்கை பெறப்பட்டுள்ளது. அவற்றுடன் இந்த டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளப்படுபவர்களின் ரத்த மாதிரிகள் ஒத்துப்போகிறதா? என பகுப்பாய்வு செய்யப்படும். அதன்பின் அடுத்தக்கட்ட நடவடிக்கையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொள்வார்கள்.

1 More update

Next Story