சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பற்றி தெரியுமா?- போலீஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களை பராமரிக்காதது ஏன்?- மதுரை ஐகோர்ட்டு கேள்வி


சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பற்றி தெரியுமா?- போலீஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களை பராமரிக்காதது ஏன்?- மதுரை ஐகோர்ட்டு கேள்வி
x

போலீஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களை பராமரிக்காதது ஏன்? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

மதுரை


கால் உடைப்பு

மதுரையை சேர்ந்த உலகஜோதி நூர் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "எனது மகன் செய்யது இஸ்மாயில் பட்டப்படிப்பு படிக்கும்போது மாவட்ட அளவிலான கைப்பந்து வீரராக இருந்தார். இவர் மீது மதுரை போலீசார் பொய் வழக்கு பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். விடுமுறையில் மதுரை வந்த இவர் கடந்த மாதம் 4-ந் தேதி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது நள்ளிரவில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சிவா, ஏட்டு காமராஜ் உள்ளிட்ட போலீசார் எனது மகனை கைது செய்தனர். அவனது நண்பர்களான சேக் முகம்மது, விஜய், முகமது இஸ்மாயில் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர். அப்போது, எங்கள் வீட்டில் இருந்த செல்போன்களை பறித்து சென்று விட்டனர். கடுமையாக தாக்கி எனது மகன் மற்றும் அவனது நண்பர்களின் கால்களை உடைத்தனர்.

கண்காணிப்பு கேமரா பதிவு

போலீசாரின் இந்த செயல் மனித உரிமைக்கு எதிரானது. எனது மகனை துன்புறுத்தி கடுமையாக தாக்கியதற்கான ஆதாரங்களாக உள்ள பழைய கமிஷனர் அலுவலக கண்காணிப்பு கேமரா மற்றும் கரிமேடு போலீஸ் நிலைய கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளன. இந்த இடங்களில் கடந்த மாதம் 4-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை இந்த வழக்கு முடியும் வரை பாதுகாப்பாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, பழைய கமிஷனர் அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா உள்ளதா என கேள்வி எழுப்பினார். இதற்கு, அங்கு கண்காணிப்பு கேமரா உள்ளது. ஆனால், கரிமேடு போலீஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை பதிவு செய்வதற்கான ஹார்டு டிஸ்க் இல்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து போலீஸ் நிலையங்களிலும், விசாரணை மேற்கொள்ளப்படும் இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் இருக்க வேண்டும் என்றும், அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருப்பது தெரியுமா? அல்லது தெரிந்தும் இவ்வாறு பதிலளிக்கிறீர்களா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

உத்தரவு

மேலும், கண்காணிப்பு கேமராக்களை முறையாக பராமரிக்காததற்கு என்ன காரணம்? என்றும் கேட்டார்.

பின்னர், மனுதாரர் கோரும் நாட்களில் பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வழக்கு விசாரணை முடியும் வரை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று மதுரை மாநகர போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்ட நீதிபதி, சட்டவிரோத கைது மற்றும் தாக்குதல் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து போலீஸ் கமிஷனர் பதில் அளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை வருகிற 3-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.


Next Story