டாக்டர்கள் சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும்


டாக்டர்கள் சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும்
x

அரியலூர் மாவட்டத்தில் டாக்டர்கள் சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் என கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரியலூர்

கூட்டம்

அரியலூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் புகையிலை பொருட்களுக்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்டம், அயோடின் பற்றாக்குறை விழிப்புணர்வு கூட்டம், மருத்துவ அலுவலர்களுக்கான மாதாந்திர திறனாய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் பள்ளிகளுக்கு 100 மீட்டருக்கு அப்பால் மட்டுமே புகையிலை பொருட்கள் விற்கப்படும் என்றும், புகையிலை இல்லா கல்வி வளாக சான்றிதழை அனைத்து பள்ளிகளும் பெறவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அயோடின் பற்றாக்குறையினால் அறிவு கூர்மையின்மை, கருவளர்ச்சி சிதைவு, முன்கழுத்து கழலை போன்ற நோய்கள் வருவதிலிருந்து காத்து கொள்ள அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

சேவை மனப்பான்மையுடன்...

மேலும், மருத்துவர்களுக்கான மாதாந்திர திறனாய்வு கூட்டத்தில் சிசு மரணம் மற்றும் மகப்பேறு மரண விகிதத்தை குறைப்பதற்கான வழிவகைகள் மற்றும் விழிப்புணர்வு அளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அனைத்து டாக்டர்களும் தங்களது பணி நேரத்தை முறையாக கடைபிடிக்கவும், சேவை மனப்பான்மையுடன் பணியாற்றுமாறும் கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா கேட்டு கொண்டார். இதில் இணை இயக்குனர் நலப்பணிகள் (பொறுப்பு) டாக்டர் இளவரசன், துணை இயக்குனர் சுகாதார பணிகள் (பொறுப்பு) டாக்டர் செந்தில்குமார், குழு உறுப்பினர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், மருத்துவ அலுவலர்கள், தொழில்நுட்ப உதவியாளர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் பகுதி சுகாதார செவிலியர்கள் ஆகியோர்கலந்து கொண்டனர்.


Next Story