மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று டிரைவர் தற்கொலை

மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று, டிரைவர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
Published on

சிவகாசி, 

மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று, டிரைவர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

லாரி டிரைவர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பேர்நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 32). லாரி டிரைவர். இவருடைய மனைவி உமையலட்சுமி. இவர்களுடைய மகள் அபிநயா (9). மகன் மனோஜ்குமார் (6). இதில் உமையலட்சுமி சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்.

இதனை தொடர்ந்து சிறுவன் மனோஜ்குமார், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வருகிறான். கணேசன் தன் மகளுடன் பேர்நாயக்கன்பட்டியில் வசித்து வந்தார்.

2-வது திருமணம்

உமையலட்சுமியின் சகோதரி ராதிகாவை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணேசன் 2-வது திருமணம் செய்து கொண்டார். கணேசன், ராதிகா, அபிநயா ஆகியோர் பேர்நாயக்கன்பட்டியில் தனியாக வசித்து வந்தனர்.

கணேசன், ராதிகாவுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. ராதிகா, விளாத்திகுளத்தில் உள்ள தன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அதன்பின்னர் கணேசன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். மனவேதனையில் இருந்த அவரை உறவினர்கள் சமாதானம் செய்துள்ளனர்.

மகளுக்கு விஷம் கொடுத்தார்

இந்த நிலையில் நேற்று காலை 9 மணிக்கு தனது உறவினரான பொன்ராஜ் என்பவருக்கு கணேசன் போன் செய்தார். அப்போது தனது மகளுக்கு விஷத்தை கொடுத்துவிட்டு தானும் குடித்துவிட்டதாக கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொன்ராஜ் மற்றும் உறவினர்கள் கணேசன் வீட்டிற்கு வந்து விரைந்து வந்தனர்.

அங்கு மயங்கி கிடந்த தந்தை, மகள் இருவரையும் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பணியில் இருந்த டாக்டர், அவர்களை பரிசோதனை செய்த போது இருவரும் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

இந்த சோக சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com