டிரைவர் கடத்தல்; அண்ணன்-தம்பிக்கு வலைவீச்சு


டிரைவர் கடத்தல்; அண்ணன்-தம்பிக்கு வலைவீச்சு
x

டிரைவர் கடத்தல் சம்பவத்தில் அண்ணன்-தம்பியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி

முசிறி:

டிரைவர்

திருச்சி மாவட்டம், முசிறி சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்த ராஜசேகரின் மகன் கண்ணன்(வயது 36). டிரைவரான இவர், கள்ளத்தெருவை சேர்ந்த ராஜபாண்டி(44,) அவரது தம்பி ஸ்ரீராம் (35) ஆகியோரிடம் வட்டிக்கு ரூ.30 ஆயிரம் வாங்கியுள்ளார். அதற்கான வட்டித்தொகையை கடந்த 3 மாதமாக அவர் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரு வழக்கு சம்பந்தமாக முசிறி கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த கண்ணனை ராஜபாண்டி, ஸ்ரீராம் ஆகியோர் அவரது வீட்டிற்கு அழைத்துச்சென்று அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் கண்ணனையும் காரில் கடத்திச்சென்று துன்புறுத்தியதாக தெரிகிறது. கண்ணனின் மனைவி தங்கவள்ளி, மகள் லிகிஸ்(8), மகன் தர்ஷன்(7) ஆகியோரை ஸ்ரீராம், கண்ணனின் வீட்டில் அடைத்து பூட்டி சென்றுள்ளார். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டனர்.

அண்ணன்-தம்பிக்கு வலைவீச்சு

இது குறித்து தங்கவள்ளி முசிறி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையறிந்த ராஜபாண்டி, ஸ்ரீராம் ஆகியோர் கண்ணனை விடுவித்துள்ளனர். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த கண்ணன் முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இது குறித்து அவர் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக்கிடம் புகார் அளித்தார். அதன்பேரில் ராஜபாண்டி, ஸ்ரீராம் ஆகியோர் மீது ஆள் கடத்தல், அடித்து துன்புறுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

சூதாடிய 10 பேர் கைது

*சோமரசம்பேட்டை அருகே உள்ள கொத்தட்டை காலனியில் பணம் வைத்து சூதாடியதாக அப்பகுதியை சேர்ந்த உஸ்மான் அலி(40), அரியமங்கலம் ஆயில் மில் பகுதியை சேர்ந்த பால்ராஜ்(57), முள்ளிகரும்பூர் கீழத்தெருவை தெருவை சேர்ந்த ராஜ்கமல்(34), அல்லித்துறை மேலத்தெருவை சேர்ந்த சுப்ரமணி(56), சோமரசம்பேட்டை மேல பாப்பாக்குறிச்சியை சேர்ந்த ராஜு(42), மருதண்டாகுறிச்சி மேல பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்த தீனதயாளன், கீழவயலூர் பகுதியை சேர்ந்த பார்த்திபன்(27), இனாம்புலியூர் மேலத்தெருவை சேர்ந்த மணி(44), ஆகாஷ், சோமரசம்பேட்டை புது தெருவை சேர்ந்த அன்புராஜ்(51) ஆகியோரை சோமரசம்பேட்டை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 இருசக்கர வாகனங்கள், ரூ.8,495 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

*திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி, காந்தி நகரை சேர்ந்த லோகநாதனின் மனைவி முழுமதி(57), சம்பவத்தன்று வீட்டிலிருந்தபோது நிலை தடுமாறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாகனம் மோதி 3 மாடுகள் பலி

*திருச்சி-சென்னை பைபாஸ்சாலையில் செந்தண்ணீர்புரம் பகுதியில் நேற்று காலை சில மாடுகள் சாலையை கடக்க முயன்றன. அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வாகனம் சாலையின் குறுக்கே சென்ற மாடுகள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் 3 மாடுகள் துடிதுடித்து கீழே விழுந்து இறந்தன. ஒரு மாட்டிற்கு கால் உடைந்தது. இது பற்றி தகவல் அறிந்த மாநகராட்சி ஊழியர்கள் அங்கு சென்று இறந்து கிடந்த மாடுகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் கால் உடைந்த மாட்டிற்கு கால்நடை மருத்துவர்கள் மூலம் முதலுதவி சிகிச்சை அளித்து பராமரிப்புக்காக கொண்டு செல்லப்பட்டது. கடந்த 10 நாட்களில் மட்டும் அந்த பகுதியில் ஏராளமான மாடுகள் விபத்தில் சிக்கி இருப்பதாகவும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

*லால்குடியை அடுத்த திருமணமேடு பழைய தெருவை சேர்ந்த பூபாலன் மகன் பிரபாகரன்(26), சம்பவத்தன்று வீட்டுக்கு உபயோகப்படாத பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மிரட்டி வந்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அவரை லால்குடி போலீசார் கைது செய்தனர்.


Next Story