எடப்பாடி பழனிசாமி வசமானது அ.தி.மு.க. அலுவலகம்: ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


எடப்பாடி பழனிசாமி வசமானது அ.தி.மு.க. அலுவலகம்: ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x

அ.தி.மு.க. அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. தொண்டர்களை ஒரு மாதத்துக்கு அனுமதிக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தி உள்ளது.

சென்னை,

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் புயலை கிளப்பியதால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் உருவானது.

கலவரம்

இதற்கிடையே கடந்த 11-ந் தேதி சென்னை வானகரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஓ.பன்னீர்செல்வத்தின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டதுடன், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார்.

அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்கு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களுக்கும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் பெரும் கலவரம் வெடித்தது.

அ.தி.மு.க. அலுவலகத்துக்கு 'சீல்'

இதையடுத்து சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் 'சீல்' வைத்தார்.

இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

தீர்ப்பு

இந்த வழக்கை நீதிபதி என்.சதீஷ்குமார் கடந்த வாரம் விசாரித்தார். அப்போது, போலீஸ் தரப்பில் குற்றவியல் வக்கீல் திலக்ராஜ், எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வக்கீல் விஜய்நாராயண், வக்கீல் முகமதுரியாஸ், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல்கள் அரவிந்த்பாண்டியன், ஏ.ரமேஷ், வக்கீல் திருமாறன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி என்.சதீஷ்குமார் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று பிறப்பித்தார். அதில் நீதிபதி கூறியிருப்பதாவது:-

லேசான தடியடி

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை உருவாக்குவது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 11-ந் தேதி பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் நடந்தபோது, போலீஸ் பாதுகாப்புடன் ஓ.பன்னீர்செல்வம் தன் ஆதரவாளருடன் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வந்துள்ளார்.

அலுவலகத்துக்கு வந்தவர் ஒன்றும் சாதாரண ஆளில்லை. அவர், முதல்-அமைச்சராக பதவி வகித்தவர். பொதுக்குழுவில் தனக்கு ஆதரவு இல்லை என்றதும், போர்க்களமாக்க வேண்டும் என்று முயற்சிக்கும்போது, கலவரம் வெடித்துள்ளது. போலீஸ் தரப்பில் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நடவடிக்கை எடுத்திருந்தால், இதுபோன்ற வன்முறை சம்பவமே நடந்திருக்காது. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுடன் அலுவலகத்துக்குள் நுழையும் வரை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் பின்னரே லேசான தடியடி நடத்தியுள்ளனர்.

இதுபோன்ற செயலை ஓ.பன்னீர்செல்வம் செய்திருக்க கூடாது. அதேபோல, எடப்பாடி பழனிசாமியும் தனது ஆதரவாளர்களை கட்சி அலுவலகத்துக்குள் அனுமதித்து இருக்க கூடாது. மொத்தத்தில் இரு தலைவர்களும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொள்ளவில்லை.

ஜானகியிடம் ஒப்படைப்பு

இந்த சம்பவம் குறித்து போலீசார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி, குற்றவியல் விசாரணை முறை சட்டப்பிரிவு 145-ன் கீழ் அலுவலகத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் 'சீல்' வைத்துள்ளார்.

இதேபோன்ற ஒரு சூழ்நிலை 1988-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் நடந்தது. அப்போது, அலுவலகத்துக்கு 'சீல்' வைப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க. அலுவலகம், அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரனிடம்தான் இருந்தது. அதனால், அந்த அலுவலகத்தை அவரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.

அதே கோட்பாட்டை இந்த வழக்கிலும் பயன்படுத்த வேண்டியதுள்ளது. கட்சி அலுவலகம் ஓ.பன்னீர்செல்வம் கட்டுப்பாட்டில் இல்லை. சொத்து சுவாதீனம் தொடர்பாகவும் இரு பிரிவினர் இடையே பிரச்சினை இல்லை. போலீஸ் அறிக்கையில் கூட அலுவலகம் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில்தான் இருந்தது என்று கூறப்பட்டுள்ளது.

யாருடைய கட்டுப்பாட்டில்...

ஒரு சொத்தை 'சீல்' வைக்க வேண்டும் என்றால், அந்த சொத்தில் பிரச்சினை இருக்க வேண்டும். கலவரத்தை தூண்டிவிட்டு, பிரச்சினை இருப்பது போன்று உருவாக்குவதை ஏற்க முடியாது. அமைதியை நிலைநாட்ட சட்டப்பிரிவு 145-ன் கீழ் அலுவலகத்துக்கு 'சீல்' வைத்தாலும், கடைசியாக யாருடைய கட்டுப்பாட்டில் அலுவலகம் இருந்தது என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

ஆனால், வருவாய் கோட்டாட்சியர் உத்தரவில் அதுகுறித்து எந்த விவரமும் இல்லை. இதன்மூலம், வருவாய் கோட்டாட்சியர் தன் முழு மனதை செலுத்தி, அலுவலகத்துக்கு 'சீல்' வைத்து இந்த உத்தரவை பிறப்பிக்கவில்லை என்பது தெரிகிறது.

அடக்குமுறை

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறும்போது, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தில் பிரச்சினை செய்யலாம். எனவே, அலுவலகத்துக்கு பாதுகாப்பு வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஜூன் 26-ந் தேதியே போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளார். கட்சி சார்பில், கடந்த 7-ந் தேதி அலுவலகத்துக்கு பாதுகாப்பு கேட்டு மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அ.தி.மு.க. அலுவலகம் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில்தான் கடைசியாக இருந்துள்ளது என்று நிரூபணமாகிறது.

ஆனால், வருவாய் கோட்டாட்சியரோ எந்திரத்தனமாக உத்தரவை பிறப்பித்து, மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியின் அலுவலகத்தை மூடியுள்ளார். இந்த செயல், ஒரு அரசியல் கட்சியின் ஜனநாயக நடவடிக்கையை முடக்கும் அடக்குமுறை ஆகும்.

அத்துமீறல்தான்

அரசியல் கட்சியோ, சங்கமோ உறுப்பினர்களின் பெரும்பான்மை முடிவே இறுதியானது. அப்படி இருக்கும்போது, ஒரு நபர் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கிய பின்னர், பூட்டி வைக்கப்பட்ட ஒரு அலுவலகத்தின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றால், அது சட்டவிரோதமாக அத்துமீறி நுழைவதாக தான் அர்த்தம்.

இப்படிபட்ட சூழ்நிலையில், அலுவலகம் தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்சினை என்று கூறி, அலுவலகத்துக்கு 'சீல்' வைக்க முடியாது. எனவே, அ.தி.மு.க. அலுவலகத்துக்கு 'சீல்' வைத்த வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவை ரத்து செய்கிறேன்.

எடப்பாடி பழனிசாமியிடம் சாவி ஒப்படைப்பு

அ.தி.மு.க. அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும். அ.தி.மு.க. அலுவலகத்துக்கு போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க வேண்டும். முடிவாக அலுவலக சீலை அகற்றக்கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

அலுவலகத்துக்கு வைத்த சீலை அகற்றக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால், அலுவலக சாவியை தன் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. ஒட்டுமொத்த சூழ்நிலையை கருதி, கட்சி அலுவலகத்துக்கு தொண்டர்களையோ, ஆதரவாளர்களையோ ஒரு மாதத்துக்கு எடப்பாடி பழனிசாமி அனுமதிக்கக்கூடாது.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

ஐகோர்ட்டு தீர்ப்பின் மூலம் அ.தி.மு.க. அலுவலகம் எடப்பாடி பழனிசாமி வசமாகியுள்ளது.

பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ஐகோர்ட்டு தீர்ப்பையடுத்து சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, சேவூர் ராமச்சந்திரன், டி.கே.எம்.சின்னையா, பி.வி.ரமணா, அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன், இளைஞர் அணி இணை செயலாளர் சுனில் மற்றும் அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அதிக அளவில் வருகை தந்து பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினார்கள்.

முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

நல்ல உதாரணம்

பின்னர் அ.தி.மு.க. வக்கீல் பிரிவு இணை செயலாளர் இன்பதுரை நிருபர்களிடம் கூறுகையில், 'அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி கையில் இருக்கிறது என்பதற்கு இந்த தீர்ப்பு நல்ல உதாரணம். இந்த வழக்கை மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதனை எதிர்த்து சட்டப்படியான நடவடிக்கையை அ.தி.மு.க. செய்யும்' என்று கூறினார்.

வெறிச்சோடிய ஓ.பன்னீர்செல்வம் வீடு

அதே நேரத்தில், சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீடு தொண்டர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக ஓ.பன்னீர்செல்வம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதால் அவரது வீட்டிற்கு தொண்டர்கள் வரவில்லை என்று கூறப்படுகிறது.

எனினும் அ.தி.மு.க. அலுவலகம் 'சீல்' வைக்கப்பட்டது தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளியானதால் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் வீடு அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே நீதிபதி சதீஷ்குமார் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வக்கீல்கள் தெரிவித்தனர்.


Next Story