மகத்துவம் வாய்ந்த செங்கழுநீர் பூக்களை அழிவிலிருந்து மீட்க நடவடிக்கை


மகத்துவம் வாய்ந்த செங்கழுநீர் பூக்களை அழிவிலிருந்து மீட்க நடவடிக்கை
x
தினத்தந்தி 4 Sept 2023 12:45 AM IST (Updated: 4 Sept 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் தியாகராஜருக்கு உகந்த மகத்துவம் வாய்ந்த செங்கழுநீர் பூக்களை அழிவிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

திருவாரூர்

திருவாரூர் தியாகராஜருக்கு உகந்த மகத்துவம் வாய்ந்த செங்கழுநீர் பூக்களை அழிவிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சப்த விடங்க தலங்கள்

திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோவில் சைவ சமயங்களில் தலைமை பீடமாகும். பிறக்க முக்தி அளிக்கும் தலமாகவும் கருதப்படுகிறது. தியாகராஜர் கோவிலில் மூலவராக வன்மீகநாதரும், அவருக்கு அருகில் உள்ள சன்னதியில் தேவலோகத்தில் இருந்து வந்த தியாகராஜர் உற்சவராகவும் அருள்பாலித்து வருகிறார்கள்.

அசுரர்களுடனான போரில் தேவர்களுக்கு உதவியதால் முசுகுந்த சக்கரவர்த்திக்கு 7 சோமாஸ்கந்த மூர்த்தங்களை வழங்கினார். அந்த மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்ட திருவாரூர் தியாகராஜர் கோவில் உள்ளிட்ட 7 கோவில்கள் சப்த விடங்க தலங்கள் என அழைக்கப்படுகின்றன.

மகத்துவம் வாய்ந்த செங்கழுநீர் பூ

சப்த விடங்க தலங்களுள் ஒன்றான தியாகராஜர் கோவில் 5 வேலி, குளம் 5 வேலி, செங்கழுநீர் ஓடை 5 வேலி பரப்பளவு கொண்டதாகும். இதில் செங்கழுநீர் என்பது தேவலோகத்தை சேர்ந்த பூவாக கருதப்படுகிறது. இந்த பூ எளிதில் எங்கும் பூக்க கூடியதல்ல. தியாகராஜருக்கு உகந்த செங்கழுநீர் பூக்களை வளர்க்க திருவாரூர் வடக்கு வடம்போக்கி தெருவில் இருந்து தர்ம கோவில் தெரு வரை 5 வேலி நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பராமரிக்கப்படடு வந்தது.

ஆக்கிரமிப்புகளால் இந்த 5 வேலி நிலத்தின் பரப்பு சுருங்கி இன்று ஏட்டில் மட்டுமே 5 வேலி செங்கழுநீர் ஓடை என படிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

கோவில் நந்தவனத்தில்...

குட்டையில் மட்டும் வளரக்குடிய செங்கழுநீர் பூக்களை பரம்பரை பரம்பரையாக சுந்தரமூர்த்தி என்பவர் பராமரித்து வந்தார். இங்கு மலரும் செங்கழுநீர் பூக்கள் நாள்தோறும் தியாகராஜர் சாயரட்சை பூஜையில் முக்கிய இடத்தை பிடித்து வந்தது. அதுவும் காலப்போக்கில் குறைந்து கொண்டே வருகிறது.

பூவை பராமரித்து வந்த சுந்தரமூர்த்தி மறைவுக்கு பின்னர் இந்த குட்டை உரிய பராமரிப்பு இன்றி பூக்கள் மலர்வது முற்றிலும் தடைபட்டுள்ளது. இந்த நிலையில் செங்கழுநீர் பூக்களின் கிழங்கினை கொண்டு தியாகராஜர் கோவில் நந்தவன வளாகத்தில் சிறுகுட்டை போல் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவே செங்கழுநீர் பூக்களின் தற்போதைய அடையாளமாக திகழ்கிறது. மகத்துவம் வாய்ந்த செங்கழுநீர் பூக்களை அழிவிலிருந்து மீட்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஆன்மிக சேவகர் கனகசபாபதி:-

தேவலோக பூ

திருமால் வழிபட்ட தியாகராஜர், முசுகுந்த சக்கரவர்த்தி மூலமாக பூலோகம் வந்தது போல், செங்கழுநீர் பூவும் தேவலோக பூவாக கருதப்படுகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட செங்கழுநீர் குட்டைகள் இருந்தன. ஆனால் தற்போது தற்போது ஒரு சில குட்டைகள் மட்டுமே எஞ்சி உள்ளன.

கடைசியாக சுந்தரமூர்த்தி என்பவர் மூலம் குட்டைகளில் பராமரிக்கப்பட்டு வந்த செங்கழுநீர் பூக்கள் தியாகராஜர் பூஜையை அலங்கரித்து வந்தன. அவருடைய மறைவுக்கு பின்னர் இந்த குட்டை பயனற்று காட்சி பொருளாக இருந்து வருகிறது. குறிப்பாக இந்த குட்டைக்கு தண்ணீர் வரும் 'பி' வாய்க்கால் கழிவு நீர் ஓடையாக மாறிவிட்டது. மகத்துவம் வாய்ந்த செங்கழுநீர் பூக்கள் தொடர்ந்து பூக்க வசதியாக குட்டைகளை முறையாக பராமரிக்க இந்துசமய அறநிலையத்துறை போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பூவை வளர்ப்பதற்கு தனியாக ஆட்கள் நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story