கத்திக்குத்தில் காயமடைந்த முதியவர் சாவு
ஜோலார்பேட்டை அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கத்திக்குத்தில் காயமடைந்த முதியவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அதை தொடர்ந்து அவரது தம்பியை போலீசார் தேடி வருகிறார்கள்.
கத்திக்குத்து
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த மேல் அச்சமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 66). இவரது தம்பி கோவிந்தராஜ் (54). இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக பணத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் ஜெயராமன் மனைவி ஜெயலட்சுமி கடந்த 17-ந் தேதி கோவிந்தராஜ் வீட்டின் வழியாக கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது கோவிந்தராஜ், ஜெயலட்சுமியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த ஜெயராமன், கோவிந்தராஜை தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெயராமனை குத்தி உள்ளார். இதை தடுக்கவந்த ஜெயராமனின் மனைவி ஜெயலட்சுமியையும் குத்தியுள்ளார்.
சிகிச்சை பலனின்றி சாவு
இதில் படுகாயம் அடைந்த இருவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக ஜெயராமன் வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை ஜெயராமன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ஜெயராமனின் மகள் ஜெயசுதா ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள கோவிந்தராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

