பெருந்துறை அருகே மின்கம்பத்தில் ஏறியபோது பரிதாபம்: மின்சாரம் தாக்கியதில் தீப்பிடித்து உடல் கருகி ஊழியர் பலி


பெருந்துறை அருகே மின்கம்பத்தில் ஏறியபோது பரிதாபம்: மின்சாரம் தாக்கியதில் தீப்பிடித்து உடல் கருகி ஊழியர் பலி
x

பெருந்துறை அருகே மின்கம்பத்தில் ஏறியபோது மின்சாரம் தாக்கியதில் தீப்பிடித்து உடல் கருகி மின் ஊழியர் கருகி பலி ஆனார்.

ஈரோடு

பெருந்துறை

பெருந்துறை அருகே மின்கம்பத்தில் ஏறியபோது மின்சாரம் தாக்கியதில் தீப்பிடித்து உடல் கருகி மின் ஊழியர் கருகி பலி ஆனார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மின்வாரிய ஊழியர்

திருவாரூர் மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள ஆலம்பாடியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மகன் சிவசங்கர் (வயது 28). இவர் பெருந்துறை மின்சார வாரியத்தில் மின் ஊழியராக (கேங் மேன்) வேலை செய்து வந்தார்.

இவர் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள மின் கம்பத்தில் மின்சார லைனை மாற்றிவிடுவதற்காக ஏறினார்.

மின்சாரம் தாக்கி சாவு

அப்போது அவரை எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில் மின்கம்பத்தில் நின்ற நிலையிலேயே அவர் உடலில் தீப்பற்றி எரிந்தது. இந்த சம்பவத்தில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி அறிந்ததும் பெருந்துறை மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின்கம்பத்துக்கான மின்சாரத்தை முழுமையாக துண்டித்தனர்.

விசாரணை

மேலும் இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின்சார கம்பத்தில் தொங்கிய நிலையில் இறந்த சிவசங்கரின் உடலை மீட்டனர். பின்னர் பெருந்துறை போலீசார் சம்பவ இடம் சென்று சிவசங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி இறந்த சிவசங்கருக்கு கவிதா (22) என்கிற மனைவியும், 4 மாத பெண் குழந்தையும் உள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story