மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல் நிலை பரிசோதனை


மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல் நிலை பரிசோதனை
x

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் முதல் நிலை பரிசோதனை அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று தொடங்கியது.

கரூர்

முதல் நிலை பரிசோதனை

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் நாடாளுமன்ற தேர்தல் 2024-க்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் முதல் நிலை பரிசோதனை நேற்று தொடங்கியது. இதனை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் 2024-க்கான கரூர் தொகுதிக்குட்பட்ட இருப்பில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட புதிய வாக்குப்பதிவு எந்திரங்களை முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் இன்று (நேற்று) தொடங்கி ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி வரை நடைபெறும்.

வாக்குப்பதிவு எந்திரங்கள்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கிடங்கில் 4,917 வாக்குப்பதிவு எந்திரங்கள், 1,499 கட்டுப்பாட்டு கருவிகள், 1,611 வாக்காளர்களின் வாக்குப்பதிவினை உறுதி செய்யும் கருவிகள் ஆகியவை இருப்பில் உள்ளன. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த கிடங்கு திறக்கப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை முதல் நிலை சரிபார்க்கும் பணிகள் தொடங்க உள்ளது.

இந்த பணிகளில் மூன்று விதமான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களையும் பி.இ.எல். நிறுவனத்துடைய பொறியாளர்கள் சரிபார்ப்பார்கள். இதில் குறைபாடு உள்ள எந்திரங்கள் கண்டறியப்பட்டு அதனை அப்புறப்படுத்தப்படும்.

பயிற்சி

இப்பணிகள் அனைத்தும் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெறும். இதுகுறித்த பயிற்சிகள் தலைமை தேர்தல் அலுவலர் தலைமையில் அனைத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மாவட்ட கலெக்டர்களுக்கு சென்னையில் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல்நிலை சரி பார்க்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கண்காணிக்கும் அலுவலர் சந்தியா, தாசில்தார் (தேர்தல்) விஜயலெட்சுமி, துணை தாசில்தார் (தேர்தல்) ரவிவர்மன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story