ஆசனூர் சாலையில் கும்கி யானைகள் முன் செல்பி எடுத்த சுற்றுலா பயணிகள்

ஆசனூர் சாலையில் கும்கி யானைகள் முன் செல்பி எடுத்த சுற்றுலா பயணிகள்
தாளவாடி
ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை வனத்தையொட்டியுள்ள கிராமங்களில் புகுந்து அங்கு சாகுபடி செய்த வாழை, மக்காச்சோளம் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. மேலும் இரவு நேர காவலுக்கு செல்லும் விவசாயிகளையும் ஒற்றை யானை தாக்குகிறது. இதனால் அச்சமடைந்த விவசாயிகள் ஒற்றை யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து பொள்ளாச்சியில் இருந்து கும்கி யானைகளான ராமு, சின்னத்தம்பி ஆகியவை வரவழைக்கப்பட்டு உள்ளன. ஒற்றை யானை வரும் வழித்தடத்தில் தினமும் கும்கி யானைகளை நிறுத்தி வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அவ்வாறு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ள கும்கி யானைகள் ஆசனூர் சாலையில் நடந்து வரும்போது அங்கிருந்த சுற்றுலா பயணிகள் கும்கி யானை முன் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் கர்நாடக அரசு பஸ்சில் வந்த கர்நாடக பயணிகள் யானையை புகைப்படம் எடுத்ததுடன், செல்பி எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி யானை அருகே சுற்றுலா பயணிகள் வராதபடி வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கும்கி யானையை பார்க்க சுற்றுலா பயணிகள் கூட்டம் கூடியதால் ஆசனூர் சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.