56 யானைகள் வனப்பகுதிக்கு விரட்டப்பட்டன
ஓசூர் அருகே சானமாவு காட்டில் முகாமிட்டிருந்த 56 யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டப்பட்டன.
ஓசூர்
ஓசூர் அருகே சானமாவு காட்டில் முகாமிட்டிருந்த 56 யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டப்பட்டன.
யானைகள் அட்டகாசம்
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 100-க்கும் மேற்பட்ட யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் வருவது வழக்கம். ராகி பயிர் அறுவடையை குறி வைத்து வரும் இந்த யானைகள் 4 மாதங்கள் இந்த பகுதியில் முகாமிட்டு பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகின்றன.
இதேபோல இந்த ஆண்டும் 100-க்கும் மேற்பட்ட யானைகள் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து தமிழக வனப்பகுதிக்கு வந்து முகாமிட்டு இருந்தன. கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை வனப்பகுதிகளில் முகாமிட்டிருந்த யானைகள் 2 குழுக்களாக பிரிந்து சுற்றித்திரிந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்பு 50-க்கும் மேற்பட்ட யானைகள் ஓசூர் சானமாவு காட்டிற்கு வந்தன.
குட்டிகளுடன் முகாம்
குட்டிகளுடன் 56 யானைகள் சானமாவு காட்டில் முகாமிட்டு பகல் நேரத்தில் வனப்பகுதிக்குள்ளும், இரவு நேரத்தில் அருகில் உள்ள கிராமங்களுக்குள் சென்று பயிர்களை சேதப்படுத்தி வந்தன. இந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில் சானமாவு காட்டில் முகாமிட்டு இருந்த யானைகளையும் ஓசூர் வனச்சரகர் ரவி தலைமையில் வன ஊழியர்கள் பட்டாசுகள் வெடித்தும், மேளம் அடித்தும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து யானைகள் போடிச்சிப்பள்ளி, ஜக்கேரி வழியாக தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டினர். இந்த யானைகள் குட்டிகளுடன் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றன.
வனத்துறையினர் அறிவுறுத்தல்
தற்போது ஓசூர் சானமாவு காட்டில் ஒரு யானை மட்டும் உள்ளது. அந்த யானையையும் விரட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஓசூர் சானமாவு காட்டில் ஒரு யானை முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் வனப்பகுதிக்குள் ஆடு, மாடுகளை மேய்க்க செல்ல வேண்டாம் என்றும், விறகுகளை எடுக்க செல்ல வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தினர்.