விவசாய நிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம்
ராயக்கோட்டை அருகே விவசாய நிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்தன.
ராயக்கோட்டை
ராயக்கோட்டை அருகே விவசாய நிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்தன.
யானைகள் அட்டகாசம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஊடேதுர்க்கம் காப்புக்காட்டில் 40-க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றித்திரிகின்றன. இந்த யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு நெருப்புக்குட்டை கிராமத்திற்குள் புகுந்த யானைகள் முத்தப்பா, நாராயணப்பா ஆகியோரது விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த கொள்ளு, நெல், தீவன பயிர்கள் ஆகியவற்றை தின்றும் கால்களால் மிதித்தும் சேதப்படுத்தின. மேலும் தோட்டத்தில் இருந்த வாழை மரங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன.
பயிர்களுக்கு இழப்பீடு
இதனிடையே ேநற்று காலை விவசாயிகள் தோட்டத்திற்கு சென்ற போது யானைகள் பயிர்களை சேதப்படுத்தியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ராயக்கோட்டை வனச்சரகர் பார்த்தசாரதி தலைமையிலான வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து வந்து சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டனர்.
அப்போது யானைகளால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். விவசாய நிலங்களில் யானைகள் புகுவதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் உறுதியளித்தனர். பின்னர் அவர்கள் யானைகளை ஊடேதுர்க்கம் காப்புக்காட்டிற்கு விரட்டினர்.