கால்நடை பண்ணைக்குள் புகுந்த யானைகள்
மத்திகிரி கால்நடை பண்ணைக்குள் யானைகள் புகுந்தன. இந்த யானைகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மத்திகிரி
மத்திகிரி கால்நடை பண்ணைக்குள் யானைகள் புகுந்தன. இந்த யானைகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
யானைகள்
கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, சானமாவு உள்ளிட்ட வனப்பகுதிக்குள் புகுந்தன. இந்த யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சுற்றித்திரிகின்றன. மேலும் இந்த யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்து சேதப்படுத்தியும் வருகின்றன.
இதனிடையே கர்நாடக வனப்பகுதியில் இருந்து 7 யானைகள் நேற்று காலை ஓசூர் அருகே உள்ள மத்திகிரியில் மாவட்ட கால்நடை பண்ணைக்குள் புகுந்தன. இதைகண்டு பொதுமக்கள் மற்றும் பண்ணை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து சென்றனர்.
தீவிர கண்காணிப்பு
இந்த கால்நடை பண்ணைக்குள் மூங்கில் மரங்கள் மற்றும் பல்வேறு வகையான மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் யானைகள் அங்கு பதுங்கி இருப்பது தெரியவந்தது. இந்த யானைகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் யானைகளை கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.