ஏரியில் ஆனந்த குளியல் போட்ட 3 யானைகள்
ஓசூர் அருகே கர்னூர் ஏரியில் யானைகள் ஆனந்த குளியல் போட்டன. இவைகளின் நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
மத்திகிரி
ஓசூர் அருகே கர்னூர் ஏரியில் யானைகள் ஆனந்த குளியல் போட்டன. இவைகளின் நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
யானைகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இந்த யானைகள் பல குழுக்களாக பிரிந்து சுற்றித்திரிகின்றன. இதனிடையே நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் ஆனேக்கல் வனப்பகுதியில் இருந்து 5 யானைகள் வெளியேறி ஓசூர் அருகே உள்ள மத்திகிரி அரசு கால்நடை பண்ணையில் முகாமிட்டு இருந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து சென்று யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்தனர். பின்னர் அந்த 5 யானைகளையும் வனத்துறையினர் பட்டாசு வெடித்து தளி வனப்பகுதி வழியாக ஆனேக்கல் வனப்பகுதிக்கு விரட்டினர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
ஏரியில் குளித்தன
இந்தநிலையில் ஆனேக்கல் வனப்பகுதிக்கு விரட்டப்பட்ட 5 யானைகளில், 3 யானைகள் தனியாக பிரிந்து மீண்டும் ஓசூர் அருகே நேற்று காலை வந்தன. பின்னர் அந்த யானைகள் மத்திகிரி அருகே உள்ள கர்னூர் ஏரியில் இறங்கி நீண்ட நேரம் ஆனந்த குளியல் போட்டன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் 30-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அங்கு சென்று யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
இதனால் ஏரியை சுற்றி உள்ள மத்திகிரி, அந்திவாடி, கர்னூர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் ஏரி அருகில் மீன்பிடிக்கவோ, யானைகளை பார்க்கவோ யாரும் வர வேண்டாம் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கர்னூர் பகுதிக்கு மீண்டும் 3 யானைகள் வந்ததால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.