பயிர்களை சேதப்படுத்திய யானைகள்

தேன்கனிக்கோட்டை அருகே விவசாய நிலங்களில் புகுந்து யானைகள் பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை அருகே விவசாய நிலங்களில் புகுந்து யானைகள் பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
யானைகள் அட்டகாசம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனச்சரகம் பேவனத்தம் வனப்பகுதி வட்டவடிவு பாறை என்ற பகுதியில் 10 யானைகள் முகாமிட்டு பல்வேறு இடங்களில் சுற்றித்திரிகின்றன. நேற்று முன்தினம் இரவு பேவநத்தம் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த யானைகள் திம்மசந்திரம், மேகலகவுண்டனூர் பகுதியில் விவசாய நிலங்களில் புகுந்தன.
இந்த யானைகள் தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ், வாழை உள்ளிட்ட பயிர்களை தின்றும் கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்தன. விவசாய நிலங்களில் சோலார் மின்வேலி அமைக்கப்பட்டு இருந்ததால் யானைகள் வெளியே செல்ல முடியாமல் அங்கேயே நின்று இருந்தன. இதுகுறித்து விவசாயிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
பட்டாசு வெடித்து விரட்டினர்
அதன்பேரில் தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் முருகேசன் தலைமையில் வேட்டை தடுப்பு காவலர்கள் சென்று சோலார் மின் வேலி, மின் இணைப்பை துண்டித்து விட்டு பட்டாசு வெடித்து யானைகளை விரட்டினர். பின்னர் யானைகள் அங்கிருந்து மீண்டும் திம்மசந்திரம் காட்டின் வழியாக பேவநத்தம் வனப்பகுதி வட்டவடிவு பாறை பகுதிக்குள் சென்றன. யானைகள் பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
அதேபோல் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சாப்பராணப்பள்ளி கிராமம் அருகே மாதப்பன் என்பவர் தோட்டத்தில் யானை புகுந்து மக்காச்சோளம், வாழை தோட்டத்தை சேதப்படுத்தி சென்றது. இதை அறிந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் விரைந்து சென்று சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டனர். அப்போது யானையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.






