கிராமங்களில் சுற்றித்திரிந்த 4 யானைகள்

தேன்கனிக்கோட்டை அருகே கிராமங்களில் சுற்றித்திரிந்த 4 யானைகள் அங்குள்ள ஏரியில் ஆனந்த குளியல் போட்டன.
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை அருகே கிராமங்களில் சுற்றித்திரிந்த 4 யானைகள் அங்குள்ள ஏரியில் ஆனந்த குளியல் போட்டன.
யானைகள் அட்டகாசம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை கஸ்பா வனப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு இருந்தன. இந்த யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து பட்டாசுகள் வெடித்து யானைகளை கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்டினர்.
இந்தநிலையில் 20 யானைகளும் முள் பிளாட் வனப்பகுதி அருகே சென்றபோது பல்வேறு குழுக்களாக பிரிந்தது. இதில் இருந்து பிரிந்த 4 யானைகள் நேற்று தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கண்டகாணப்பள்ளி கிராமத்தில் சுற்றித்திரிந்தன. பின்னர் இந்த யானைகள் அங்குள்ள ஓசட்டி ஏரியில் இறங்கி ஆனந்த குளியல் போட்டன. இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரட்டும் பணி தீவிரம்
அதன்பேரில் தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் விரைந்து சென்று பட்டாசுகள் வெடித்து யானைகளை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த 4 யானைகளையும் பாலதொட்டப்பள்ளி, அகலக்கோட்டை, ரங்கசத்திரம் கிராமங்கள் வழியாக ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டி சென்று அங்கிருந்து கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணியில் 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.






