திருவல்லிக்கேணியில் அடகு கடையில் 4¼ கிலோ தங்க நகைகள், ரூ.50 லட்சம் கையாடல் செய்த ஊழியர் கைது


திருவல்லிக்கேணியில் அடகு கடையில் 4¼ கிலோ தங்க நகைகள், ரூ.50 லட்சம் கையாடல் செய்த ஊழியர் கைது
x
தினத்தந்தி 22 Oct 2023 8:57 AM GMT (Updated: 22 Oct 2023 10:21 AM GMT)

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அடகு கடையில் 4¼ கிலோ தங்க நகைகள், ரூ.50 லட்சம் பணத்தை கையாடல் செய்த ஊழியர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு ஊழியரை போலீசார் தேடி வருகிறார்கள்.

சென்னை

சென்னை பூங்கா நகர் வெங்கடாச்சல முதலி தெருவை சேர்ந்தவர் விமல்குமார் ஜெயின் (வயது 63). இவர், திருவல்லிக்கேணி வி.ஆர்.பிள்ளை தெருவில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் ராஜஸ்தானை சேர்ந்த மாங்கிலால், சென்னை கே.கே.நகரை சேர்ந்த குருபிரசாத் ஆகிய 2 பேர் ஊழியர்களாக பணியாற்றி வந்தனர்.

விமல்குமார் ஜெயின் கடையில் இல்லாத நேரத்தில் ஊழியர் மாங்கி லாலிடம் பொறுப்பை ஒப்படைத்து செல்வது வழக்கம். இந்த நிலையில் விமல்குமார் ஜெயின் நகைக்கடையின் கணக்கு விவரங்களை சரி பார்த்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கடையில் இருந்த 4¼ கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.50 லட்சம் பணம் கையாடல் செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையே ஊழியர்கள் 2 பேரும் தலைமறைவாகி விட்டனர்.

இதுகுறித்து அடகு கடை உரிமையாளர் விமல்குமார் ஜெயின், ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் நகை மற்றும் பணத்துடன் தலைமறைவானது தெரிய வந்தது. அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் குருபிரசாத் என்ற ஊழியர் கைது செய்யப்பட்டார். முக்கிய குற்றவாளி மாங்கிலால் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவர் ராஜஸ்தான் தப்பி சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவரை பிடிக்க போலீசார் வியூகம் அமைத்துள்ளனர்.


Next Story