நீர் வெளியேறும் இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
நீர் வெளியேறும் இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அடையாளம் கண்டு அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் பேசினார்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பேசியதாவது:-
வெள்ளத்தால் பாதிக்கப்பட கூடிய பகுதிகள், நிவாரண முகாம்கள் வருவாய்த்துறை மூலமாக கோட்டாட்சியர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.
ஜெனரேட்டர், தனியார் ஆம்புலன்சு, மரம் அறுக்கும் எந்திரங்கள் போன்றவற்றின் பட்டியல் தயார் நிலையில் இருக்க வேண்டும். நீர் வெளியேறும் இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அடையாளம் கண்டு அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அனைத்து துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல் பேரிடர் கால மீட்பு நடவடிக்கை குறித்த பேரிடர் மேலாண்மை திட்டத்தினை காவல் துறை தயார் செய்ய வேண்டும். பேரிடர் குறித்த பயிற்சி பெற்ற காவலர்கள் மீட்பு நடவடிக்கைகளுக்காக தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களை தூர்வார அதிக முக்கியத்துவம் தரவேண்டும்.
தயார் நிலையில் இருக்க வேண்டும்
பொதுப்பணித்துறை (நீர்வளத்துறை) கட்டுபாட்டில் உள்ள ஏரிகளின் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு மழை வெள்ளம் எவ்வித தடங்களும் இன்றி ஏரிகளுக்கு செல்லும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.ஏரி கரைகளில் உடைப்பு ஏற்படும் நேர்வுகளில் அதனை உடனடியாக சரிசெய்ய தேவையான மணல் மூட்டைகள், மரக்கட்டைகள் போன்றவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும்.
பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றுவதற்கான திட்டத்தினை தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை வகுக்க வேண்டும். பள்ளிக்கட்டிடங்கள் நல்ல உறுதித்தன்மை கொண்டதாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். இடியும் நிலையில் உள்ள பள்ளிக்கட்டிடங்களை இடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் சேதமடைந்த நிலையில் உள்ள மின்கம்பங்கள் அனைத்தும் உடனடியாக மாற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அனைத்துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கோடை விழா
தொடர்ந்து வருகிற 18 மற்றும் 19-ந் தேதிகளில் நடைபெற உள்ள ஜவ்வாதுமலை கோடை விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்களிடம் கலெக்டர் ஆய்வு மேற்கெண்டார். அப்போது நலத்திட்ட உதவிகள் பெறும் பயனாளிகள் பட்டியல், அரங்கம் அமைப்பது, கலைநிகழ்ச்சிகள் நடத்துவது, விளையாட்டு போட்டிகள் நடத்துவது, அடிப்படை வசதிகள் மேற்கொள்வது, உணவு அரங்கம், மருத்துவ வசதி, பொழுதுபோக்கு அம்சங்கள் குறித்து உடடினயாக இறுதிசெய்யப்பட வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, செய்யாறு சப்-கலெக்டர் அனாமிகா, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) சையித் சுலைமான், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வெற்றிவேல், திருமால் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.