தண்டவாளத்தில் படுத்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை


தண்டவாளத்தில் படுத்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
x

தண்டவாளத்தில் படுத்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

மணப்பாறை:

தலை துண்டான நிலையில்...

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ரெயில் நிலையம் அருகே நாளங்காடிக்கு பின் பகுதியில் வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் நேற்று காலை திருச்சி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

அங்கு இறந்து கிடந்த வாலிபரின் தலை மற்றும் ஒரு கை தனியாக துண்டிக்கப்பட்டும், உடல் தனியாகவும் கிடந்தது. இதையடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

பணத்தை இழந்தார்

இதில் அங்கு இறந்து கிடந்த வாலிபர், மணப்பாறையை அடுத்த அமயபுரம் அருகே உள்ள மலையாண்டிப்பட்டியைச் சேர்ந்த ரவிக்குமாரின் மகன் சந்தோஷ் (வயது 23) என்பது தெரியவந்தது. இவர் மணப்பாறை அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் இறுதியாண்டு படித்து வந்தார்.

மேலும் இவர் கடந்த 6 மாதங்களாக ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்துள்ளார். ஒரு கட்டத்தில் வீட்டில் இருந்த நகைகளை எடுத்துச்சென்று, அதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டும் ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார். இதில் அந்த பணத்தையும் அவர் இழந்ததால் மிகுந்த மனவேதனைக்கு ஆளான சந்தோஷ், ெரயில்வே தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார், என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ேபாலீசார் விசாரணை

இதற்கிடையே சம்பவ இடத்துக்கு வந்த சந்தோஷின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதது, கல் நெஞ்சையும் கரைய செய்வதாக இருந்தது. இதையடுத்து அவரது உடலை ரெயில்வே போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைன் விளையாட்டால் பணத்தை இழந்த என்ஜினீயரிங் மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் மணப்பாறையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கந்தர்வகோட்டை தொகுதி எம்.எல்.ஏ. சின்னதுரை கூறுகையில், இந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் உடனடியாக ஆன்லைன் ரம்மி விளையாட்டை அரசு தடை செய்ய வேண்டும். ஆன்லைன் விளையாட்டை ஊக்குவிக்கும் பிரபலங்களின் விளம்பரங்களுக்கும் அரசு தடை விதிக்க வேண்டும், என்றார்.

என் மரணத்திற்கு காரணம் ஆன்லைன் ரம்மிதான்

தற்கொலை செய்து கொண்ட என்ஜினீயரிங் மாணவர் சந்தோஷ் நேற்று முன்தினம் இரவு 9.50 மணிக்கு தனது செல்ேபானில் உள்ள வாட்ஸ்-அப்பில் ஒரு 'ஸ்டேட்டஸ்' வைத்துள்ளார். அதில், என்னுடைய மரணத்திற்கு முழு காரணம் ஆன்லைன் ரம்மிதான். அதில் நான் அடிமையாகி அதிக பணம் இழந்ததால் உயிரை மாய்த்துக் கொள்கிறேன், என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பின்னர் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவரது 'ஸ்டேட்டசை' பார்த்தவர்கள் அவருக்கு என்ன நேர்ந்ததோ என்ற தவிப்புக்கு உள்ளாகினர். இறுதியில் நேற்று சந்தோசை பிணமாகவே பார்க்க முடிந்தது.

வாட்ஸ்-அப் மூலம் கிடைத்த தகவல்

ரெயில்வே தண்டவாளத்தில் கிடந்த சந்தோஷின் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அவரை பற்றிய தகவல் உடனடியாக தெரியவில்லை. இதற்கிடையே இந்த சம்பவம் பற்றிய தகவல் வாட்ஸ்-அப்பில் பலரால் பகிரப்பட்டது. அந்த பதிவை கண்ட சந்தோஷின் ஊரை சேர்ந்தவர்கள், இதுபற்றி அவரது தந்தை ரவிக்குமாருக்கு தெரிவித்துள்ளனர். இதையடுத்தே ரவிக்குமார், சம்பவ இடத்திற்கு வந்து பார்த்துள்ளார். அதன்பின்னரே அங்கு இறந்து கிடந்தது சந்தோஷ்தான் என்பது தெரியவந்தது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் எங்களது குடும்பம் நாசமாகிவிட்டதே...

தற்கொலை செய்து கொண்ட மாணவர் சந்தோஷின் தந்தை ரவிக்குமார் கூலித்தொழிலாளி ஆவார். இந்த சம்பவம் குறித்து அவர் கூறுகையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டால் என் மகன் இப்படி இறந்திருப்பது மிகுந்த வேதனையாக உள்ளது. என் மகனை போன்று இனி ஒரு உயிர் எந்த சூழ்நிலையிலும் போகக்கூடாது. ஆகவே ஆன்லைன் ரம்மி விளையாட்டை அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும், என்றார். சந்தோஷின் தாய் கவிதா கூறுகையில், இந்த விளையாட்டால் பல குடும்பங்கள் நாசமாவதாக கூறுவார்கள். இப்போது, எங்களது குடும்பமும் நாசமாகிவிட்டது. எனவே உடனடியாக இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும், என்று கண்ணீர் விட்டு கதறினார்.


Next Story