ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி; நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி; நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
x

ஈரோடு கிழக்கு தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பெறும் வெற்றியானது நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் என்று ஓட்டுப்போட்ட பிறகு காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஓட்டு போட்டார்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நேற்று நடந்தது. இங்கு தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டார். அவர் நேற்று காலை 9 மணிக்கு ஈரோடு கச்சேரி வீதி, பழைய கோர்ட்டு அருகே உள்ள தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். முன்னதாக வாக்குச்சாவடிக்கு வந்த அவர் பொதுமக்களுடன் வரிசையில் நின்றார். ஆனால் அங்கிருந்த மக்கள் அவரை உடனடியாக ஓட்டுப்போட அனுமதித்ததன் பேரில் அவர் தனது வாக்காளர் அடையாள அட்டையை காட்டி ஓட்டு போட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வெள்ளோட்டம்

இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும். இந்ததேர்தல் வெற்றியானது, நடைபெற உள்ள நாடாளுமன்ற தொகுதிக்கான வெள்ளோட்டமாக, முன்னோட்டமாக அமையும். ஈரோட்டில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி போன்று, நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறும்.

தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்ட புகார்கள் தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆதாரப்பூர்வமான அனைத்து புகார்கள் மீதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். ஆதாரமற்ற புகார்கள் அனைத்தும் சாதாரண காகிதங்கள்தான். அ.தி.மு.க. ஜெயிக்க முடியாது என்பதை தெரிந்து கொண்டு புகார்கள் கூறுகிறார்கள்.

மிகப்பெரிய வெற்றி

தேர்தல் முறையாக நடக்கிறது. தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு மக்களின் ஆதரவு உள்ளது. எனவே கை சின்னத்துக்கு மக்கள் அதிக வாக்குகள் அளிப்பார்கள். மிகப்பெரிய வெற்றி பெறுவோம்.

இந்த தேர்தலில் அமைச்சர்கள் இங்கே வந்து தேர்தல் பிரசாரம் செய்தனர். அவர்கள் அமைச்சர்களாக இருந்தாலும் தி.மு.க. கட்சியின் தொண்டர்கள். தங்கள் கட்சியின் கூட்டணி வெற்றிக்காக அவர்கள் வந்து உழைத்தார்கள். இதுதொன்று தொட்டு நடைபெறும் முறைதான்.

திட்டங்கள் நிறைவேற்ற...

நான் வெற்றி பெற்றால், ஈரோட்டில் இருக்கமாட்டேன், சென்னைக்கு சென்று விடுவேன் என்று புகார் கூறுவதாக தெரிகிறது. சரிதான். நான் ஈரோட்டிலேயே உட்கார்ந்து கொண்டிருந்தால், எனக்கு வாக்களிக்கும் மக்களுக்கு நலத்திட்டங்கள் எப்படி செய்ய முடியும். ஏற்கனவே ஈரோட்டுக்கு என்னென்ன தேவை என்ற பட்டியலை எனது மகன் மறைந்த திருமகன் ஈவெரா தமிழக அரசிடம் வழங்கி இருக்கிறார். இன்னும் பல தேவைகள் உள்ளன. இவற்றை நிறைவேற்ற நான் சென்னைக்கு சென்று முதல்-அமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகளை சந்தித்து வற்புறுத்தி திட்டங்களை நிறைவேற்ற சென்னை செல்வேன்.

இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

அவருடன் அவரது மகன் சஞ்சய் சம்பத் தனது ஓட்டை பதிவுசெய்தார். முன்னதாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மனைவி வரலட்சுமி இளங்கோவன் ஓட்டு போட்டார்.


Next Story