ஏரியில் இருந்து அளவுக்கு அதிகமாக அள்ளப்படும் வண்டல் மண்


ஏரியில் இருந்து அளவுக்கு அதிகமாக அள்ளப்படும் வண்டல் மண்
x
தினத்தந்தி 31 May 2023 6:45 PM GMT (Updated: 31 May 2023 6:45 PM GMT)

4 வழிச்சாலை பணிக்காக ஏரியில் இருந்து அளவுக்கு அதிகமாக அள்ளப்படும் வண்டல் மண் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்

விழுப்புரம்

விழுப்புரம்

4 வழிச்சாலை பணிகள்

விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையே ரூ.6 ஆயிரத்து 431 கோடியில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சாலை மற்றும் மேம்பால பணிக்காக விழுப்புரம் ஜானகிபுரம், கோலியனூர், ஆனாங்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரிகளில் இருந்து 6 அடி ஆழத்திற்கு வண்டல் மண் எடுத்து பயன்படுத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் ஜானகிபுரம் பகுதியில் உள்ள ஏரியில் இருந்து அரசு நிர்ணயித்த அளவை விட அளவுக்கு அதிகமாக பள்ளம் தோண்டி வண்டல் மண் எடுத்து சாலை அமைக்கும் பணியை தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இங்குள்ள ஏரியில் இருந்து அரசு நிர்ணயித்த அளவை விட சுமார் 10 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி வண்டல் மண் எடுப்பதாகவும், தினமும் 50-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் வண்டல் மண் எடுத்துச்செல்லப்படுவதாகவும், இவ்வாறு சட்டவிரோதமாக வண்டல் மண் எடுத்துச்செல்லப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் 4 வழிச்சாலை பணிகள் மற்றும் மேம்பால பணிக்காக நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அளவுக்கு அதிகமாக பள்ளம் தோண்டி வண்டல் மண் எடுக்கப்படுவதால் இங்குள்ள ஏரியில் விவசாய பயன்பாட்டுக்கு வண்டல் மண் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் புலம்புகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஏரியில் அளவுக்கு அதிகமாக பள்ளம் தோண்டுவதால் மழைக்காலங்களில் ஏரி நிரம்பும்பட்சத்தில் அங்கு சிறுவர், சிறுமிகள், பொதுமக்கள் குளிக்கச்சென்றால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உருவாகலாம்.

எனவே 4 வழிச்சாலை பணிகள் என்ற பெயரில் நிர்ணயித்த அளவை விட ஏரியில் அளவுக்கு அதிகமாக வண்டல் மண் எடுப்பது குறித்து மாவட்ட நிர்வாகத்தினர் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story