உழவு பணிகளில் விவசாயிகள் மும்முரம்
கூத்தாநல்லூர் பகுதி ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. உழவு பணிகளில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகிறார்கள்.
கூத்தாநல்லூர் பகுதி ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. உழவு பணிகளில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகிறார்கள்.
நெல் சாகுபடி
மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் டெல்டா மாவட்ட விவசாய பாசனத்துக்காக ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்த தண்ணீரை பயன்படுத்தி திருவாரூர் மாவட்டத்தில் நெல் சாகுபடி பணிகள் நடைபெறும்.
இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி முறைப்படி தண்ணீர் திறக்கப்பட்டது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் (தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை) எல்லையில் உள்ள கல்லணைக்கு மேட்டூர் அணைநீர் ஜூன் 16-ந் தேதி வந்தடைந்தது.
ஆறுகளில் தண்ணீர் திறப்பு
அதன் பின்னர் திருவாரூர் மாவட்ட பகுதிகளுக்கு பாசன வசதி தரும் வெண்ணாறு, வெள்ளையாறு, கோரையாறு ஆகிய ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதை பயன்படுத்தி திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நெல் சாகுபடி பணிகளை மேற்கொள்ள ஆயத்தமாகி வந்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டு சில நாட்கள் ஆகியும் ஆறுகளில் போதிய அளவில் தண்ணீர் செல்லவில்லை. பாசன வாய்க்கால்கள் மூலமாக வயல்களுக்கு சென்றடைவதிலும் சிரமம் இருந்தது. இதன் காரணமாக விவசாயகிள் வயல்களில் உழவு பணியில் ஈடுபட தயக்கம் காட்டினர்.
தண்ணீர் வரத்து அதிகரிப்பு
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் பகுதியில் உள்ள ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
பாசன வாய்க்கால்கள் மூலமாக வயல்வெளியை தண்ணீர் எட்ட தொடங்கி உள்ளது. மேலும் கடந்த 2 நாட்களாக கூத்தாநல்லூர் பகுதியில் பரவலாக மழை பெய்தது.
உழவு பணிகள்
ஆறுகளில் தண்ணீர் வரத்து மற்றும் பரவலாக பெய்த மழை உள்ளிட்ட காரணங்களால் கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் பகுதி விவசாயிகள் முதல் போக குறுவை சாகுபடி செய்வதற்கு ஏற்ப வயல்களை டிராக்டர் கொண்டு உழும் பணியில் மும்முரம் காட்டி வருகிறார்கள்.
பாசன வாய்க்கால்கள் மூலமாக வயல்களை வந்தடைந்த ஆற்று தண்ணீர் நல்ல ஈரப்பதத்தை தந்து இருப்பதாக விவசாயிகள் கூறுகிறார்கள். உழவு பணிகளுக்கு மழையும் கைகொடுத்து இருப்பதால் விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.