விலை உயர்வு காரணமாக பூண்டு பயிரிட விவசாயிகள் ஆர்வம்


விலை உயர்வு காரணமாக பூண்டு பயிரிட விவசாயிகள் ஆர்வம்
x

விலை உயர்வு காரணமாக மசினகுடி பகுதியில் பூண்டு பயிரிட விவசாயிகளின் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நீலகிரி

கூடலூர்

விலை உயர்வு காரணமாக மசினகுடி பகுதியில் பூண்டு பயிரிட விவசாயிகளின் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பூண்டு பயிரிட ஆர்வம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சமவெளி பகுதியாக மசினகுடி ஊராட்சி விளங்குகிறது. இங்கு மிதமான தட்ப வெப்ப காலநிலை நிலவுகிறது. பெரும்பாலான மக்கள் பல்வேறு காய்கறி விவசாயம் மற்றும் கால்நடை வளர்த்தல் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஊட்டியில் மலை பிரதேச காய்கறிகள் மற்றும் பூண்டு விவசாயம் பரவலாக நடைபெற்று வருகிறது.

இதேபோல் மசினகுடி சுற்றுவட்டார பகுதிகளிலும் பூண்டு பயிரிடுவதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்பகுதியில் விளையும் பூண்டுக்கு தனி மவுசு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் வட மாநிலங்களை சேர்ந்த மொத்த வியாபாரிகள் மசினகுடி பகுதியில் விளையும் பூண்டுகளை மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர். இதன் மூலம் விவசாயிகளுக்கு கணிசமான வருவாய் கிடைக்கிறது.

வடமாநில வியாபாரிகள்

இது குறித்து பூண்டு விவசாயிகள் கூறியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் மசினகுடி பகுதியில் விளையும் பூண்டுக்கு நல்ல விலை கிடைக்கிறது. இப்பகுதியில் விளையும் பூண்டுகளை மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் விதைக்கு பயன்படுத்துகின்றனர். இதனால் வியாபாரிகள் மொத்தமாக வாங்கி செல்கின்றனர். இதன் மூலம் பூண்டு பயிரிடுபவர்களுக்கு நிரந்தர வருவாய் கிடைக்கிறது. 3 மாத பராமரிப்பு பணி மேற்கொண்டால் விளைச்சலுக்கு தயாராகி விடும். மசினகுடி பகுதியில் பூண்டு விவசாயத்தை இன்னும் ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து விற்பனை சந்தையை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் அதிகம் பயன் பெறுவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story