விவசாயிகள் தேங்காய் உடைத்து போராட்டம்
ஜலகண்டாபுரம், சங்ககிரியில் விவசாயிகள் தேங்காயை உடைத்து போராட்டம் நடத்தினர்.
தேங்காய் உடைத்து போராட்டம்
சங்ககிரியில் திருச்செங்கோடு பிரிவு ரோட்டில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தினர் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு சேலம் மாவட்ட தென்னை விவசாய சங்க செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய சங்க சேலம் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில இணைச்செயலாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கொப்பரை தேங்காய் ஒரு கிலோ ரூ.140-க்கு கொள்முதல் செய்திட வேண்டும், தேங்காய் ஒரு கிலோ ரூ.50-க்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்திட வேண்டும், தேங்காய் எண்ணெயை ரேஷன்கடைகளின் மூலம் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், தேங்காய் எண்ணெய்க்கு ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும், அனைத்து தென்னை மரங்களுக்கும் பயிர் காப்பீடு வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னை விவசாய சங்கத்தினர் தேங்காயை தரையில் உடைத்து போராட்டம் செய்தனர்.
ஜலகண்டாபுரம்
இதேபோல் தென்னை விவசாயிகள் சங்கத்தினர் தேங்காய் உடைக்கும் போராட்டத்தை ஜலகண்டாபுரத்தில் நடத்தினர். தென்னை விவசாயிகள் சங்க நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் தங்கவேலு கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். பின்னர் விவசாயிகள் தேங்காய்களை உடைத்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதில், தேங்காய்க்கு கட்டுப்படியான விலை கேட்டும், ஒரு ஏக்கருக்கு 900 கிலோ கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்திடவும், கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு 140 ரூபாய் என்ற விலையில் கொள்முதல் செய்யவும், அனைத்து தென்னமர பயிர்களுக்கும் இன்சூரன்ஸ் வழங்கிடவும், அனைத்து விவசாயிகளுக்கும் முழு மானியத்தில் சொட்டு நீர்ப்பாசனம் வழங்கிடவும், தேங்காய் எண்ணெய்க்கு ஜி.எஸ்.டி. வரி ரத்து செய்யவும், தேங்காய் எண்ணெயை அரசே கொள்முதல் செய்து ரேஷன் கடை மூலமாக வினியோகம் செய்ய வலியுறுத்தியும் கோஷம் எழுப்பப்பட்டன.