திருத்தணியில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்


திருத்தணியில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்
x

கிசான் திட்டத்தில் வழங்கப்படும் பணம் வங்கி கணக்கில் வரவில்லை என விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய 3 தாலுகாவை சேர்ந்த விவசாயிகளுக்கு திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் நலம் காக்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஆர்.டி.ஓ. ஹசரத்பேகம் தலைமை தாங்கினார்.

வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கதிர்வேல், ஆர்.கே.பேட்டை தாசில்தார் சரவணன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் அனிதா, தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் கோமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் விவசாயிகள் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பூச்சி மருந்துகள், உரங்கள் தட்டுப்பாடாக உள்ளது. போலியான பூச்சி மருந்துகள் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கட்டுப்படுத்த வேண்டும்.


மேலும், ஏரி குளங்கள் பகுதியில் உள்ள வண்டல் மண் விவசாய நிலத்திற்கு எடுப்பதற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மட்டும் அரசு தடைவிதித்து உள்ளது. பிற மாவட்டங்களில் விவசாயிகள் எளிதாக வண்டல் மண்ணை அள்ளுவது போல் தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்.

பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுத்தோறும் வழங்கப்படும் ரூ.6 ஆயிரம் பணம் பெரும்பாலான விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவில்லை.

காலியாக உள்ள வேளாண்மை உதவி இயக்குனர், உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களை நியமனம் செய்ய வேண்டும், நெல் கொள்முதல் நிலையங்களை அறுவடை காலங்களில் முன்கூட்டியே தயராக திறந்து வைக்கவேண்டும், நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.50 லஞ்சம் வாங்குவதை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.


Next Story