டிரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்க விவசாயிகள் ஆர்வம்


டிரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்க விவசாயிகள் ஆர்வம்
x
தினத்தந்தி 13 July 2023 12:30 AM IST (Updated: 13 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் டிரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

திருவாரூர்

திருவாரூரில் டிரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

விவசாயம் நவீனமயம்

காவிரி டெல்டா மண்ணின் பாரம்பரியமான தொழில் விவசாயம். நெல் விளையும் பூமியான காவிரி டெல்டா தமிழகத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் தொழில்கள் அனைத்தும் நவீனத்துவம் பெற்று எந்திரமயமாக மாறி விட்டன. ஆட்களே ேதவையில்லை என்று கூறுமளவுக்கு எந்திரங்களின் ஆதிக்கம் நிலவுகிறது.

ஒரு காலத்தில் விவசாய பணிகளுக்கு ஆட்களே அதிக எண்ணிக்கையில் தேவைப்பட்டனர். ஆனால் இன்று ஏறு பூட்டி உழுவதில் தொடங்கி கதிர் அறுப்பது வரைக்கும் எந்திரங்கள் புழக்கத்துக்கு வந்து விட்டன.

உரம் தெளிக்கும் டிரோன்கள்

டெல்டா பகுதியான திருவாரூரிலும் விவசாயம் நவீனமயமாகி விட்டது. இங்கு தற்போது உரம் தெளிக்கும் பணிகளுக்கு டிரோன்களை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இதுகுறித்து திருவாரூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

விவசாய தொழிலாளர்களை மட்டுமே நம்பி இருந்த விவசாயப் பணிகள் மெல்ல மெல்ல நவீனமாகி வருகிறது. முதலில் உழவுப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பின்னர் நடவு செய்தல், களை பறித்தல், அறுவடை செய்தல் ஆகிய பணிகளுக்கும் பயன்படுத்தப்பட்டன.

குறைந்த நேரத்தில்...

காவிரி டெல்டாவில் தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவி வருவதால் விவசாயத்தில் அனைத்து பணிகளுக்கும் எந்திரங்கள் பயன்படுத்தப்படுவது தவிர்க்க முடியாததாக மாறி விட்டது. அந்த வகையில் தற்போது டிரோன்கள் மூலம் பூச்சி மருந்து, உயிர் கொல்லி மருந்துகள் தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக பல்வேறு இடங்களில் டிரோன்கள் மூலம் வயலுக்கு பூச்சி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. டிரோன்கள் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் போது குறைந்த நேரத்தில் அதிக பரப்பில் மருந்து தெளிக்க முடிகிறது.

ஒவ்வாமை

மருந்து விரயமாவது முற்றிலும் தடுக்கப்படுகிறது. பூச்சி மருந்து தெளிக்கின்ற போது அந்த பணியில் ஈடுபடுகின்ற தொழிலாளருக்கு ஒவ்வாமைகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் டிரோன்கள் மூலம் மருந்து தெளிக்கும் போது இந்த பாதிப்புகள் இருக்காது. இவ்வாறு விவசாயிகள் கூறினர்.


Next Story