பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
அம்பை அருகே பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
அம்பை:
மணிமுத்தாறு அணையின் 40 அடி கால்வாயிலில் இருந்து ஜூன் 1-ந் தேதி கார் பருவ சாகுபடிக்காக விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்த கால்வாய் மூலமாக மணிமுத்தாறு, சிங்கம்பட்டி உள்பட சுற்றுவட்டார பகுதிகளை 2,700 விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்தநிலையில் மணிமுத்தாறு, சிங்கம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தண்ணீர் திறப்பது குறித்து கோரிக்கை வைக்க மணிமுத்தாறில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு சென்று உதவி செயற்பொறியாளரிடம் கோரிக்கை விடுத்தனர். அப்போது பொதுப்பணித்துறை சார்பாக அணையில் தண்ணீர் இல்லாததால் 40 அடி கால்வாயில் தண்ணீர் திறக்க முடியாது. மேலும் மதகில் வேலை நடைபெறுவதால் வேலை முடிந்த பின்னர் தான் தண்ணீர் திறக்கப்படும் என்றனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு என்ஜினீயர் முருகனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது விவசாயிகள் கூறுகையில், இந்த அணையில் தண்ணீர் 40 அடிக்கு கீழ் இருந்தாலும், இப்பகுதிக்கு அணையில் இருந்து நேரடியாக கால்வாய் மூலமாக தண்ணீர் பெறுவதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என முறையிட்டனர்.
தகவலறிந்தும் கல்லிடைக்குறிச்சி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மதகில் வேலை நடைபெறுவதால் அணையை சுத்தமாக அடைத்துள்ளனர். விவசாயிகளின் நலன் கருதி அரசு அனுமதியோடு விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என்றனர். அதனை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.