விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
எட்டயபுரம் தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே உள்ள மாசார்பட்டி மேலக்கரந்தை, அயன்ராஜாபட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மானாவாரியாக மக்காச்சோளம் பயிர் செய்து உள்ளனர். கடந்த 2020-21-ஆம் ஆண்டுக்கு போதிய மழை பெய்யாததால் விளைச்சல் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. எனவே, பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு இழப்பீடு வழங்க கோரி உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் அய்யாதுரை தலைமையில் நேற்று எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் புதூர் வட்டார வேளாண்மை துணை அலுவலர் ராமன், உழவர் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள் நாகராஜ், சுப்புராம், தர்மராஜ், ராமசாமி, கணபதி ராஜ், ஒன்றிய கவுன்சிலர் பாக்கியலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து , ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் தாசில்தார் கிருஷ்ணகுமாரி தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 2020- 21-ஆம் ஆண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் உறுதி அளித்தார். இதை ஏற்று விவசாயிகள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.