பிறந்து 26 நாட்களே ஆன குழந்தையின் கழுத்தை அறுத்த தந்தை
அணைக்கட்டு அருகே பிறந்து 26 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை, தனக்கு பிறக்கவில்லை எனக்கூறி தந்தையே கழுத்தை அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊழியர்
வேலூர் மாவட்டம், அணைக்கட்டை அடுத்த தேவிசெட்டிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் மணிகண்டன் (வயது 30). இந்திய விமானப்படை தாம்பரம் பிரிவில் உணவு பரிமாறும் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர், அணைக்கட்டை அடுத்த ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை மகள் ஹேமலதா (22) என்பவரை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ந் தேதி திருமணம் செய்து கொண்டார்.
ஹேமலதா கருவுற்ற நிலையில், அவரது கணவர் மணிகண்டன் பணிக்கு சென்று விட்டார். இதனால் கருவுற்ற 3-வது மாதம் முதல் ஹேமலதா, தலை பிரசவத்திற்காக ரெட்டியூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று வசித்து வருகிறார்.
கழுத்தை அறுத்தார்
கடந்த 26 நாட்களுக்கு முன்பு இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இது குறித்து ஹேமலதா தனது கணவனிடம் கூறி மகிழ்ந்தார். இந்த நிலையில் மணிகண்டன் நேற்று முன்தினம் இரவு குழந்தையை பார்க்க ரெட்டியூரில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு வந்தார். அங்கு மனைவி மற்றும் குழந்தையை பார்த்தார்.
அப்போது குழந்தையின் ஜாடை என்னை போல் இல்லை. இந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை எனக்கூறி மனைவி ஹேமலதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் ஆத்திரமடைந்த மணிகண்டன் தன் கையில் வைத்திருந்த, பிளேடால் பிறந்து 26 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் கழுத்து மற்றும் வலது கையை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
தீவிர சிகிச்சை
ரத்தம் கொட்டியபடி வலி தாங்க முடியாமல் பச்சிளம் குழந்தை கதறி துடித்தது. இதனைப் பார்த்த அக்கம், பக்கத்தினர் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மணிகண்டனை வலை வீசி தேடி வருகின்றனர்.
பிறந்து 26 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை, தந்தையே கழுத்தை அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.