சென்னை கடற்கரை பகுதியில் 15-ந்தேதி காலை மீன்பிடிக்கத் தடை - மீன்வளத்துறை அறிவிப்பு


சென்னை கடற்கரை பகுதியில் 15-ந்தேதி காலை மீன்பிடிக்கத் தடை - மீன்வளத்துறை அறிவிப்பு
x

பாதுகாப்பு காரணங்கள் கருதி சென்னை துறைமுகம் முதல் பெசண்ட் நகர் வரை மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

இந்தியாவின் சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழா கொண்டாட்டதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைக்க உள்ளார். இதற்காக சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சென்னை கடற்கரை பகுதியில் வரும் ஆகஸ்ட் 15-ந்தேதி மீன்பிடிக்கத் தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு உரிமையாளர் சங்கங்கள், மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு மீன்வளத்துறை உதவி இயக்குனர் எழுதியுள்ள கடிதத்தில், "பாதுகாப்பு காரணங்கள் கருதி, ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று காலை 4 மணி முதல் 10 மணி வரை சென்னை துறைமுகம் முதல் பெசண்ட் நகர் வரை கரையிலிருந்து 5 கடல் மைல் தொலைவுக்கு மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.


Next Story