சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 2 ஓடுபாதைகளில் விமான சேவை

சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 2 ஓடுபாதைகளில் விமான சேவை நேற்று முதல் செயல்பட தொடங்கியது. இதனால் ஒரு மணிநேரத்தில் 50 விமானங்கள் தரை இறங்க, புறப்பட முடியும்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 2 ஓடுபாதைகள் உள்ளன. முதல் ஓடுபாதை 3.66 கிலோ மீட்டர் தூரமும், 2-வது ஓடுபாதை 2.89 கிலோ மீட்டர் தூரமும் கொண்டது. முதல் ஓடுபாதையில் பெரிய ரக விமானங்கள் வந்து தரை இறங்கி புறப்படுகின்றன. 2-வது ஓடுபாதையில் சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுகின்றன.
தற்போது விமான சேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால் அதற்கு ஏற்ப சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து இயக்கத்தை வேகப்படுத்த இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் உள்ள 2 ஓடுபாதைகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த விமான நிலைய நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி முதல் பிரதான ஓடுபாதையை புறப்பாட்டிற்காகவும், 2-வது ஓடுபாதையை விமானங்கள் தரை இறங்குதல் மற்றும் சிறிய ரக விமானங்கள் புறப்பாடு ஆகிய இரண்டிற்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
அதிகாரிகளுக்கு பயிற்சி
இதற்காக சென்னை விமான நிலைய போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. சோதனை அடிப்படையில் 2 ஓடுபாதைகளும் ஒரே நேரத்தில் இயக்கப்பட்டன.
இதற்கிடையே தரையிறங்கும் விமானங்கள் விரைந்து வந்து விமானங்கள் நிற்கும் நடைமேடைக்கு வருவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கும் விமானங்கள் ஒரு ஓடுபாதையில் இருந்து மற்றொரு ஓடுபாதைக்கு செல்ல டாக்ஸி வே' எனும் இணைப்பு பாதை பயன்படுத்தப்படுகிறது.
இந்த 'டாக்ஸி வே' என்ற 'பிராவோ', முதல் ஓடுபாதைக்கு நேராக செல்லாமல் வளைந்து செல்லும் வகையில் இருந்தது. இதனால் தரை இறங்கும் மற்றும் புறப்படும் விமானங்கள் 'டாக்ஸி வே' யில் விரைவாக செல்ல முடியாத நிலை இருந்தது.
இந்த 'டாக்ஸி வே' 'பி'யை நேர்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் விமானங்கள் 'டாக்ஸி வே'யில் காத்திருக்க வேண்டியதில்லை. விமானங்களை துரிதமாக இயக்க 2 ஓடுபாதைளுக்கு இடையே 5 'டாக்ஸி வே' செயல்பட தொடங்கியது.
2 ஓடுபாதைகளில் விமான சேவை
சென்னை விமான நிலையத்தில் 'டாக்ஸி வே' சீரமைப்பு, கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி, ஒரே நேரத்தில் 2 ஓடுபாதைகளில் விமானங்கள் இயக்குவது, சீரமைக்கப்பட்ட 'டாக்ஸி வே'யில் விமானங்கள் இயக்குவது என அனைத்தும் சோதனை அடிப்படையில் வெற்றிகரமாக நடந்து முடிந்து உள்ளது.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 2 ஓடுபாதைகளை செயல்படுத்த 'டைரக்டா் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேஷன்' அனுமதி அளித்தது. அதைதொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் நேற்று முதல் 2 ஓடுபாதைகளும் ஒரே நேரத்தில் இயக்கப்படுகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் இதுவரை ஒரு மணி நேரத்துக்கு 36 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இனி 50 விமானங்கள் வரை இயக்கும் திறன் கொண்டதாக மாறி உள்ளது.
இதனால் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரை இறங்குவது, புறப்பாடுகளில் அதிகமான தாமதங்கள் ஏற்படாது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். நேராக மாற்றப்பட்ட 'டாக்ஸி வே'யில் முதன் முறையாக வந்த முதல் விமானத்துக்கு இருபக்கம் தீயணைப்பு வாகனங்கள் நின்று தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்றன.






