பொள்ளாச்சி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்தது


பொள்ளாச்சி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்தது
x
தினத்தந்தி 21 Oct 2023 7:45 PM GMT (Updated: 21 Oct 2023 7:45 PM GMT)

ஆயுத பூஜையையொட்டி பொள்ளாச்சி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்தது. மல்லி கிலோ ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கோயம்புத்தூர்
ஆயுத பூஜையையொட்டி பொள்ளாச்சி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்தது. மல்லி கிலோ ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.


பூக்கள் குவிந்தன


ஆயுத பூஜை பண்டிகை நாளை(திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொள்ளாச்சி சத்திரம் வீதியில் உள்ள பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டு இருந்தன. மேலும் விலையும் உயர்ந்து இருந்தது. ஆனாலும், சிறு வியாபாரிகள், பொதுமக்கள் ஆர்வத்துடன் பூக்களை வாங்கி சென்றனர்.


இதனால் வழக்கத்தை விட பூக்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. மேலும் சத்திரம் வீதி கூட்டத்தால் களைகட்டியது. மேலும் பண்டிகையையொட்டி பூக்கள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. அதிகபட்சமாக மல்லிகை பூ கிலோ ரூ.1,000-க்கு விற்பனை ஆனது.


விலை அதிகம்


இதற்கிடையில் மார்க்கெட்டுக்கு வந்தவர்கள் வாகனங்களை தாறுமாறாக நிறுத்தியதால், அங்கு கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.


இந்த நிலையில் பூக்கள் விற்பனை குறித்து வியாபாரிகள் கூறியதாவது:-


பொள்ளாச்சி மார்க்கெட்டிற்கு சுற்று வட்டார பகுதிகள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. வழக்கமாக மார்க்கெட்டுக்கு மல்லிகை பூ உள்பட மொத்தம் 2 டன் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆயுதபூஜையையொட்டி 10 டன் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. பூக்கள் வரத்து அதிகரித்தும் விலை குறையவில்லை. எனினும் பொதுமக்கள் அதிகமாக பூக்களை வாங்கி சென்றனர். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


விலை நிலவரம்


பொள்ளாச்சி மார்க்கெட்டில் பூக்கள் விலை நிலவரம்(கிலோவில்):-


மல்லிகை பூ ரூ.800 முதல் ரூ.1000 வரையும், செவ்வந்தி ரூ.200 முதல் ரூ.300 வரையும், சம்பங்கி ரூ.250 முதல் ரூ.300 வரையும், முல்லை ரூ.600 முதல் ரூ.700 வரையும், கோழிக்கொண்டை ரூ.80 முதல் ரூ.100 வரையும், அரளி ரூ.400 முதல் ரூ.500 வரையும், பட்டுப்பூ ரூ.80 முதல் ரூ.100 வரையும், ஜாதிப்பூ ரூ.500 முதல் ரூ.600 வரையும், சில்லி ரோஸ் ஒரு கட்டு ரூ.320-க்கும் விற்பனை ஆனது.


இன்று(ஞாயிற்றுக்கிழமை) மேலும் பூக்கள் விலை உயர வாய்ப்பு உள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.Next Story