சென்னையில் 'சவர்மா' கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை - தரமற்ற கடைகளுக்கு 'சீல்'


சென்னையில் சவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை - தரமற்ற கடைகளுக்கு சீல்
x

சென்னையில் ‘சவர்மா' கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தரமற்ற கடைகளுக்கு ‘சீல்' வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

சென்னை

நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்ட சிறுமி கலையரசி உயிரிழந்தது மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 43 பேர் உடல்நலன் பாதிக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தையே பரபரப்பாக்கி இருக்கிறது. இதனைத்தொடர்ந்து உணவகங்களில் தரமற்ற சவர்மா உள்ளிட்டவற்றை தயாரித்து விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் பல இடங்களில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

சென்னையில் சவர்மா உணவு மிகவும் பிரபலம் என்பதால் தெருவுக்கு தெரு சவர்மா கடைகள் முளைத்துள்ளன. குறிப்பாக புரசைவாக்கம், எழும்பூர், புதுப்பேட்டை, பெரியமேடு, சென்டிரல் பகுதிகளில் நிறைய சவர்மா கடைகள் உள்ளன. இந்தநிலையில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் என்.ராஜா உள்ளடங்கிய குழுவினர் மேற்கண்ட பகுதிகளில் நேற்று அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர்.

சவர்மாவில் உள்ள கோழிக்கறி பதப்படுத்தி பயன்படுத்தப்படுகிறதா? நிறமூட்டி சேர்க்கப்பட்டு இருக்கிறதா? உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். தரமற்ற சவர்மா தயாரித்திருந்த வகையில் 3 கடைகளுக்கு சீல் வைத்தும் நடவடிக்கை எடுத்தனர். அதேபோல சமையல் கூடங்களும் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'கேக், இனிப்பு வகைகள், சாக்லெட் தயாரிப்புகள், ஐஸ்கிரீம், குளிர்பானங்கள், லாலிபாப் போன்ற 6 வகையான உணவு பொருட்களில் மட்டுமே வரையறுக்கப்பட்ட அளவில் நிறமூட்டிகள் சேர்க்கவேண்டும். உணவு பொருட்கள் தயாரிக்கும்போது நிறமூட்டிகள் சேர்க்க கூடாது. இதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். தொடர்ந்து ஆய்வுகள் நடைபெறும்' என்றனர்.

இதுபோன்ற ஆய்வுகள் சுழற்சி முறையில் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று பொதுமக்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.


Next Story