அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நிலக்கரி கொண்டு வந்ததில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை


அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நிலக்கரி கொண்டு வந்ததில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை
x

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் விசாகப்பட்டினத்தில் இருந்து நிலக்கரி கொண்டு வந்ததில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார்.

நாமக்கல்

டெண்டரை ரத்து செய்தோம்

தமிழக முன்னாள் மின்சாரத்துறை அமைச்சரும், நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான தங்கமணி எம்.எல்.ஏ. நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் அமைச்சராக இருந்த காலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு நிலக்கரி விசாகப்பட்டினத்தில் இருந்து கொண்டு வந்ததில் ரூ.908 கோடி ஊழல் நடந்து உள்ளதாக தவறான தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக என்மீது பொய்யான குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. இது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன். ஊழல் செய்து உள்ளதாக வெளியான தகவலில் துளியும் உண்மையில்லை.

இது தொடர்பாக நான் கடந்த 2019-ம் ஆண்டு முழு விளக்கங்களை தெரிவித்து உள்ளேன். 2000-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சி காலத்தின் தான் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து நிலக்கரி கொண்டு வர டெண்டர் விடப்பட்டது. ஒப்பந்த நிறுவனம் தடையாணை பெற்றதால், இதே நடைமுறை அ.தி.மு.க. ஆட்சி காலத்திலும் பின்பற்றப்பட்டது. 2019-ம் ஆண்டு நான் மின்சாரத்துறை அமைச்சராக இருந்து கோர்ட்டிற்கு சென்று விசாகப்பட்டினத்தில் இருந்து நிலக்கரி கொண்டு வரும் டெண்டரை ரத்து செய்தோம்.

முறைகேடு நடைபெறவில்லை

ஆனால் நான் ரூ.908 கோடி ஊழல் செய்து விட்டதாக தவறாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினரால் விசாரிக்கப்பட்டு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதில் 2001-2019-ம் ஆண்டு வரை குறிப்பிடப்பட்டு உள்ளது. அவர்கள் தெரிந்து போட்டார்களா? அல்லது தெரியாமல் போட்டார்களா? இது முதல்-அமைச்சரின் கவனத்திற்கு சென்றதா? என தெரியாது.

ஏனென்றால் 2006-2011 வரை தி.மு.க. ஆட்சிதான் நடைபெற்றது. அப்போது மின்சாரத்துறை அமைச்சராக ஆற்காடு வீராசாமி இருந்தார். தி.மு.க. ஆட்சியில் இருந்ததை மறந்து விட்டு ஊழல் என லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து உள்ளதா? என எனக்கு தெரியவில்லை. 2011-2016-ம் ஆண்டு நான் மின்துறை அமைச்சராக இருந்தபோது, அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நிலக்கரி கொண்டு வந்ததில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story