தமிழ்நாடு முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி மறைவு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
பாத்திமா பீவி உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர் ஆவார்.
சென்னை,
தமிழக முன்னாள் கவர்னரும் உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதியுமான பாத்திமா பீவி காலமானார். முதுமை சார்ந்த உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று மதியம் அவர் உயிரிழந்தார்.அவருக்கு வயது 96.
இந்த நிலையில் அவரது மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும், உச்சநீதிமன்ற நீதிபதியான முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவருமான பாத்திமா பீவி அவர்கள் மறைந்தார் என்றறிந்து வருந்துகிறேன்.
உச்சநீதிமன்ற நீதிபதி, தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர், கேரள பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர், தமிழ்நாடு ஆளுநர் எனப் பல உயர்பொறுப்புகளில் பணியாற்றியுள்ள பாத்திமா பீவி அவர்களது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.