தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி மறைவு: தலைவர்கள் இரங்கல்
தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
சென்னை,
தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 96. அவர் கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கவர்னர் ஆர்.என்.ரவி: தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் நீதிபதி எம். ஃபாத்திமா பீவியின் மறைவு ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. மக்கள் சேவையில் அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் உள்ளன. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியும், தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநருமான பாத்திமா பீவி அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார் என்ற செய்தி வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தின் போது தமிழ்நாட்டின் ஆளுநராக பதவி வகித்த பாத்தீமா பீவி அவர்கள் அரசுடன் இணக்கமாக செயல்பட்டு தமிழக மக்களின் நலனுக்கான கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கிய பங்காற்றியதையும் இந்த நேரத்தில் நினைவுகூறுகின்றேன்.
நீதித்துறையின் உயர்மட்ட பதவிகளில் பெண்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க தொடர்ந்து போராடி, சமத்துவமிக்க நீதியின் கலங்கரை விளக்கமாக திகழ்ந்த பாத்திமா பீவி அவர்கள் ஆற்றிய பணிகள் இந்திய நீதித்துறை வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின், முதல் பெண் நீதிபதி என்ற பெருமைக்குரியவரும், தமிழகத்தின் ஆளுநராக பணியாற்றியவருமான நீதியரசர் பாத்திமா பீவி அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு, தமிழக பாஜக
சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.