விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம்
விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம்
பொங்கலூர்
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அவினாசிபாளையம் சுங்கம் அருகே தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 5-ந் தேதி தொடங்கிய இந்த போராட்டம் நேற்றுடன் 9-வது நாளை நிறைவு செய்துள்ளது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்த போராட்டம் தொடரும் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் இதுவரையிலும் எந்த ஒரு பேச்சுவார்த்தைக்கும் அழைக்காததால் இந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்துவது என விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். அரசு எப்பொழுது செவி சாய்த்து தங்களை அழைத்து பேச உள்ளதோ அதுவரை இந்த போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.
நேற்று நடைபெற்ற போராட்டத்தில் வாவிபாளையம், கள்ளிப்பாளையம் மற்றும் வடமலை பாளையத்தை சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் இதில் கலந்துகொண்டனர். இந்த போராட்டத்திற்கு ராஜவாய்க்கால் நொய்யல் நீர் பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாகி திருஞான சம்பந்தம் தலைமை தாங்கினார். மேலும் இதில் தமிழக விவசாயிகள் பாதுகாப்புச்சங்கத்தின் பொதுச்செயலாளர் பார்த்தசாரதி, கழுவேறுபாளையம் சுப்பிரமணியம், முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர்கள் திருமலைசாமி, கிருஷ்ணசாமி, நிவி ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஆனந்த கிருஷ்ணன், கோவை செல்வம் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த போராட்டத்தின் போது மாசுபட்ட நொய்யல் நீரை தரையில் ஊற்றியும், உயர்மின் கோபுர அமைப்பதால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும் கவனஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.