2ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தருவதாக கூறி மோசடிஅரசு அதிகாரிகள் போல நடித்து விவசாயியிடம் ரூ.35 லட்சம் பறிப்பு
சோலார் அருகே ரூ.50 லட்சத்துக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தருவதாக கூறி அரசு அதிகாரிகள் போல நடித்து விவசாயியிடம் ரூ.35 லட்சத்தை பறித்து சென்ற 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சோலார்
சோலார் அருகே ரூ.50 லட்சத்துக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தருவதாக கூறி அரசு அதிகாரிகள் போல நடித்து விவசாயியிடம் ரூ.35 லட்சத்தை பறித்து சென்ற 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்
மத்திய அரசு சமீபத்தில் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. இந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ள வருகிற செப்டம்பர் மாதம் வரை கால அவகாசம் வழங்கி உள்ளது. இதை பயன்படுத்தி மோசடி சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
ரூ.50 லட்சம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு ரூ.35 லட்சம் கொடுத்தால் போதும் என்று கூறி தேனியை சேர்ந்த விவசாயியிடம் ஒரு கும்பல் மோசடி செய்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்ன ஓலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவாஜி (வயது 67). விவசாயி. இவருக்கு உறவினர் ஒருவரின் மூலம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள காலப்பன்பட்டி பகுதியை சேர்ந்த பாண்டி (50) என்பவர் அறிமுகமானார்.
ஆசைவார்த்தை
இந்தநிலையில் ஈரோட்டில் எனக்கு தெரிந்த நபரிடம் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அதிக அளவில் இருக்கிறது. அவரிடம் ரூ.35 லட்சம் கொடுத்தால் ரூ.50 லட்சத்துக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என்று சிவாஜியிடம் பாண்டி ஆசை வார்த்தை கூறி உள்ளார். இதை உண்மை என்று நம்பிய சிவாஜி ரூ.15 லட்சம் கூடுதலாக கிடைக்கும் என்று நினைத்துள்ளார். தொடர்ந்து தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.35 லட்சத்தை சிவாஜி எடுத்துள்ளார்.
பின்னர் பாண்டி, சிவாஜியிடம் ஒரு செல்போன் எண்ணை கொடுத்து ஈரோட்டில் உள்ள ராஜ்குமார் என்பவரிடம் பேசுமாறு கூறிஉள்ளார். உடனே சிவாஜியும் அவரை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அதில் ராஜ்குமார், சிவாஜியிடம் பணத்தை எடுத்துக்கொண்டு ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள லக்காபுரம் பரிசல்துறைக்கு வருமாறு கூறி உள்ளார்.
ரூ.35 லட்சத்தை...
இதையடுத்து கடந்த 4-ந்தேதி சிவாஜி ஒரு பையில் ரூ.35 லட்சத்தை எடுத்து கொண்டு உறவினர்களான செந்தில், மாதேஷ்குமார் மற்றும் டிரைவர் குபேந்திரன் ஆகியோருடன் ஒரு காரில் தேனி மாவட்டம் சின்னமனூரில் இருந்து ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள லக்காபுரம் பரிசல்துறைக்கு வந்து காத்திருந்தார்.
பின்னர் அங்கு ஒரு காரில் 2 பேருடன் ராஜ்குமார் வந்து இறங்கினார். அதனை தொடர்ந்து ராஜ்குமார் தனது காரில் ரூ.50 லட்சத்துக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருக்கிறது என்று சிவாஜியிடம் கூறிஉள்ளார். மேலும் இங்கு ஆட்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே நீங்கள் கொண்டு வந்த பணத்துடன் நான் வந்த காரில் ஏறுங்கள் வேறு இடத்தில் வைத்து பணத்தை எண்ணி சரிபார்த்து கொள்ளலாம் என்று கூறிஉள்ளார்.
வழிமறித்த கார்
அதன்படி சிவாஜியும், செந்திலும் ரூ.35 லட்சத்துடன் ராஜ்குமார் வந்த காரில் ஏறி சென்றனர். மாதேஷ்குமாரும், டிரைவர் குபேந்திரனும் பரிசல்துறை பகுதியிலேயே நின்றனர். கார் பரிசல் துறை நால் ரோட்டில் இருந்து திண்டல் ரிங் ரோட்டில் சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென்று அவர்கள் சென்ற காரை, எதிரே வந்த ஒரு கார் வழிமறித்து நின்றது.
பின்னர் அந்த காரில் இருந்து இறங்கிய 4 பேர் நாங்கள் ஆர்.டி.ஓ. அதிகாரிகள் எனவும், உங்கள் காரை சோதனை செய்யவேண்டும் என்றும், உரிய ஆவணங்களை காட்டுமாறும் கூறியுள்ளனர். மேலும் காரில் இருந்த சிவாஜி, செந்தில் இருவரையும் கீழே இறங்க சொன்னார்கள். அவர்கள் இறங்கியதும் காரில் இருந்த ரூ.35 லட்சம் பணத்துடன் மின்னல் வேகத்தில் 2 கார்களும் பெருந்துறை நோக்கி சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிவாஜி, ராஜ்குமார், பாண்டி ஆகியோரை தொடர்பு கொண்ட போது அவர்களின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
8 பேர் கும்பல்
இதைத்தொடர்ந்து சிவாஜி, பாண்டியை தேடி உசிலம்பட்டி சென்றார். ஆனால் அவர் அங்கு இருந்து தலைமறைவாகி விட்டார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிவாஜி மொடக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமார், பாண்டி உள்பட 8 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அவர்கள் சென்ற பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.