ராணுவ அதிகாரி என கூறி வீடு வாடகைக்கு கேட்டு மோசடி; பெண்ணிடம் ரூ.1½ லட்சம் நூதன முறையில் 'அபேஸ்'


ராணுவ அதிகாரி என கூறி வீடு வாடகைக்கு கேட்டு மோசடி; பெண்ணிடம் ரூ.1½ லட்சம் நூதன முறையில் அபேஸ்
x

ராணுவ அதிகாரி என கூறி வீடு வாடகைக்கு கேட்டு பெண்ணிடம் ரூ.1½ லட்சம் நூதன முறையில் மோசடி செய்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை

ஆன்லைனில் விளம்பரம்

சென்னை புளியந்தோப்பு அடுத்த சூளை ஆவடி சீனிவாசன் தெருவை சேர்ந்தவர் வளர்மதி (வயது 42). இவரது கணவர் ரமேஷ். பானிபூரி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். வளர்மதி தனது மற்றொரு வீட்டை வாடகைக்கு விடுவதாக ஆன்லைனில் விளம்பரம் செய்திருந்தார். இந்நிலையில் கடந்த 3-ந் தேதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நபர் ஒருவர், தனது பெயர் பவானி சிங் என்றும், ராஜஸ்தானில் ராணுவ அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும், தற்போது சென்னைக்கு மாறுதலாகி உள்ளதால் உங்கள் வீடு வாடகைக்கு தேவை எனவும் பேசி உள்ளார்.

மேலும் அந்த வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். அதற்கு செல்போன் பணபரிமாற்ற செயலி மூலம் அவரது தொலைபேசி எண்ணிற்கு ரூ.1 மட்டும் அனுப்பும்படி வளர்மதியை கேட்டுள்ளார். பதிலுக்கு பவானி சிங் ரூ.2 அனுப்பிவிட்டு வளர்மதியின் வங்கி கணக்கு விவரங்களை கேட்டுள்ளார்.

மோசடி நபர் யார்?

ஆனால் இதை நம்பி விவரங்களை தர மறுத்த வளர்மதிக்கு பவானி சிங் தன்னுடைய ஆதார் உள்ளிட்ட அடையாள விவரங்களை அனுப்பி வைத்ததை தொடர்ந்து, அதை உண்மை என நம்பிய வளர்மதி தனது வங்கி விவரங்களை கொடுத்துள்ளார். இதையடுத்து அடுத்த சில நிமிடங்களில் வளர்மதியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் எடுக்கப்பட்டதாக வளர்மதிக்கு குறுஞ்செய்தி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வளர்மதி பவானி சிங்கை தொடர்பு கொள்ள முயற்சித்த போது செல்போன் அணைக்கப்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து வளர்மதி பேசின் பிரிட்ஜ் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் இது குறித்து வழக்குப்பதி செய்து போனில் பேசி மோசடி செய்த மர்ம நபர் யார்? என விசாரித்து வருகின்றனர்.


Next Story