மாணவ-மாணவிகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு
நாகையில் போட்டித்தேர்வை எதிர்கொள்ளும் மாணவ-மாணவிகளுக்கு இலவச பயிற்சி வகுப்பை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
நாகையில் போட்டித்தேர்வை எதிர்கொள்ளும் மாணவ-மாணவிகளுக்கு இலவச பயிற்சி வகுப்பை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
இலவச பயிற்சி முகாம்
நாகை அருகே உள்ள சர்ஐசக் நியூட்டன் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித்தேர்வை எதிர்கொள்ளும் மாணவ-மாணவிகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சரால் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மத்திய பணியாளர் தேர்வாணையம், ரெயில்வே பணியாளர் தேர்வாணையம் மற்றும் வங்கி பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றின் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு உதவியாக வேலைவாய்ப்பு பயிற்சித்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து இலவச பயிற்சி வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
150 பேருக்கு பயிற்சி
தமிழகம் முழுவதும் இந்த இலவச பயிற்சி வகுப்பு இன்று (நேற்று) தொடங்கப்படுகிறது. இந்த இலவச பயிற்சி வகுப்பு 100 நாள் நடைபெறும். அதன் தொடர்ச்சியாக நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் தேர்வு செய்யப்பட்டு, சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட 150 நபர்கள் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்துள்ளனர். படித்த இளைஞர்கள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் தமிழ்நாட்டைச் சார்ந்த இளைஞர்கள் மத்திய அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.
மேலும் இந்த பயிற்சியில் கலந்து கொண்ட அனைவரும் வெற்றி பெற்று பணியில் அமர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொ) எகசனாலி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக உதவி இயக்குனர் செந்தில்குமாரி, சர்ஐசக் நியூட்டன் கல்வி நிறுவன தாளாளர் ஆனந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்.