மீளவிட்டானில் இருந்து தூத்துக்குடி வரை புதிய தண்டவாளத்தில் அதிவேக ரெயில் என்ஜினை இயக்கி சோதனை


மீளவிட்டானில் இருந்து தூத்துக்குடி வரை புதிய தண்டவாளத்தில் அதிவேக ரெயில் என்ஜினை இயக்கி சோதனை
x
தினத்தந்தி 10 July 2023 12:15 AM IST (Updated: 10 July 2023 12:36 PM IST)
t-max-icont-min-icon

மீளவிட்டானில் இருந்து தூத்துக்குடி வரை புதிய தண்டவாளத்தில் அதிவேக ரெயில் என்ஜினை இயக்கி செவ்வாய்க்கிழமை சோதனை நடக்கிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மீளவிட்டானில் இருந்து தூத்துக்குடி கீழுர் ரெயில் நிலையம் வரையிலான புதிய தண்டவாளத்தில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அதிவேக ரெயில் என்ஜினை இயக்கி நாளை (செவ்வாய்க்கிழமை) சோதனை மேற்கொள்கிறார். எனவே, அப்பகுதியில் நாளை பொதுமக்கள் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரட்டை ரெயில் பாதை

மதுரையில் இருந்து தூத்துக்குடி வரையிலான 158.81 கிலோ மீட்டர் தூர இரட்டை ரெயில் பாதை மற்றும் மின்மயமாக்கல் பணி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பணிகள் ரூ.1890.66 கோடி செலவில் பல்வேறு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. கடம்பூர்-தட்டப்பாறை, திருமங்கலம்-துலுக்கப்பட்டி, தட்டப்பாறை-மீளவிட்டான், துலுக்கப்பட்டி-கோவில்பட்டி, கோவில்பட்டி-கடம்பூர், மதுரை-திருமங்கலம் ஆகிய பிரிவுகளாக பிரித்து பணிகள் முடிக்கப்பட்டன. இந்த ரெயில் பாதையில் அதிவேக ரெயில்கள் இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டன.

மீளவிட்டான்-தூத்துக்குடி

இறுதியாக மீளவிட்டானில் இருந்து தூத்துக்குடி கீழுர் ரெயில் நிலையம் வரையிலான 7.67 கிலோமீட்டர் தூர இரட்டை ரெயில் பாதை பணிகள் நடந்து வந்தன. இந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு உள்ளன.

இதனை தொடர்ந்து பெங்களூரு தெற்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆனந்த் மதுக்கர் சவுத்ரி நாளை (செவ்வாய்க்கிழமை) புதிய இரட்டை ரெயில் வழித்தடத்தில் பாதுகாப்பு சோதனை நடத்த உள்ளார். அவர் நாளை காலை 9 மணிக்கு தூத்துக்குடி மீளவிட்டானில் இருந்து மோட்டார் டிராலி மூலம் தண்டவாள பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு உள்ளதா, மின்மயமாக்க பணிகள் தரமாக செய்யப்பட்டு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்கிறார். அவர் மதியம் 1 மணிக்கு தூத்துக்குடியை வந்தடைகிறார். இதனை தொடர்ந்து மதியம் அதிவேக ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி தட்டப்பாறை ரெயில் நிலைய்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு ரெயில் என்ஜின் புறப்படுகிறது. இந்த என்ஜின் 4 மணிக்கு தூத்துக்குடியை வந்தடைகிறது. பின்னர் 4.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு தட்டப்பாறையை ரெயில் நிலையத்தை சென்றடைகிறது.

செல்ல வேண்டாம்

இந்த அதிவேக ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெறுவதால் மீளவிட்டானில் இருந்து தூத்துக்குடி ரெயில் நிலையம் வரையிலான தண்டவாளத்தின் ஓரத்தில் உள்ள பொதுமக்கள், ரெயில்வே ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் யாரும் தண்டவாளத்தை கடக்க வேண்டும். தண்டவாளத்தின் அருகில் செல்ல வேண்டாம் என்றும் தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

இந்த பாதுகாப்பு ஆய்வு முடிந்த பிறகு தூத்துக்குடி-மதுரை இடையேயான இரட்டை ரெயில்பாதை பணிகள் முழுமையாக முடிவடைந்து விடும். இதனால் புதிய ரெயில்பாதையிலும் ரெயில்கள் இயக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story