சித்திரை மாதத்தை வரவேற்கும் விதமாக பூத்துக்குலுங்கும் கனிக்கொன்றை மரங்கள்


சித்திரை மாதத்தை வரவேற்கும் விதமாக பூத்துக்குலுங்கும் கனிக்கொன்றை மரங்கள்
x

குமரி மாவட்டத்தில் சித்திரை மாதத்தை வரவேற்கும் விதமாக கனிக்கொன்றை மரங்கள் பூத்துக்குலுங்குகின்றன

கன்னியாகுமரி

குலசேகரம்,

குமரி மாவட்டத்தில் சித்திரை மாதத்தை வரவேற்கும் விதமாக கனிக்கொன்றை மரங்கள் பூத்துக்குலுங்குகின்றன

கனிகொன்றை மரம்

கொன்றை மரங்களில் கனிக்கொன்றை, மயில் கொன்றை, தீக்கொன்றை என பல்வேறு வகைகள் உள்ளன. இவற்றில் கனிக்கொன்றை எனப்படும் மரங்கள் சிறப்பு வாய்ந்தவையாகும். தமிழ் பக்தி இலக்கியங்களிலும், சங்க இலக்கியங்களிலும் கொன்றை மர மலர்கள் இடம் பெற்றுள்ளன.

இதில் குறிப்பாக பக்தி இலக்கியங்களில் கொன்றை மரத்தின் மலர்கள் சிவபெருமானுக்கு உகந்த மலர்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. கோவில்களில் கனிக் கொன்றை மரங்கள் தல விருட்சங்களாகவும் உள்ளன. கனிக் கொன்றை மலர் கேரளாவின் மாநில மலராகவும், தாய்லாந்து நாட்டின் தேசிய மலராகவும் உள்ளது.

பூத்து குலுங்குகிறது

பேபேசியே என்னும் தாவரவியல் குடும்பத்தை சேர்ந்த கனிக்கொன்றை மரம் ஆங்கிலத்தில் கேசியா பிஸ்டுலா எனவும் கோட்டன் ரெயின் ட்ரீ எனவும் அழைக்கப்படுகிறது. மேலும் இம்மரங்களின் மலர்கள் பூச்சரம் போல் பூத்துத் தொங்குவதால் இம்மரம் சரக்கொன்றை என்றும் அழைக்கப்படுகிறது. முல்லை நிலத்திற்குரிய இம்மரங்கள் குமரி மாவட்டத்தில் கோவில் வளாகங்களிலும், வீடுகளின் முற்றங்களிலும் அதிகமாக காணப்படுகின்றன. இம்மரங்கள் இளவேனிற்காலத் தொடக்கத்தில் பங்குனி-சித்திரை மாதங்களில் பூத்துக் குலுங்கும். பூக்கும் காலத்தில் மரங்களில் இலைகளையே பார்க்கமுடியாத அளவுக்கு பூக்கள் மட்டுமே அடர்ந்து காணப்படுவது இம்மரங்களின் சிறப்பாகும். தங்க மழை பொழிவது போல் இம்மரங்களின் மலர்கள் கொத்துக் கொத்தாக பூத்து தொங்குவதால் (கோல்டன் ரெயின் ட்ரீ) தங்க மழை மரம் என வர்ணிக்கப்படுகின்றன. பெண்களின் நீண்ட கூந்தலுக்கு இணையாக கனிக்கொன்றை மலர்கள் உவமைப்படுத்தப்படுவதும் உண்டு.

சித்திரை விஷூ கனி காணல்

தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்தை வரவேற்கும் விதமாக இந்த மரங்கள் பூத்துக் குலுங்குவது வழக்கம்.

குமரி மாவட்டத்திலும், கேரளாவிலும் சித்திரை விஷு கனி காணல் நிகழ்ச்சியில் கனிக்கொன்றை மலர்களுக்கு முக்கிய இடம் உண்டு. சித்திரை முதல் நாளில் வீடுகளின் பூஜை அறைகளில் அல்லது சாமி படங்களின் முன்பாக கனிகளோடு மஞ்சள் நிற கனிக்கொன்றை மலர்களையும் தட்டில் வைத்து பார்த்தால் அனைத்து நன்மைகளும் உண்டாகும் என்பது மக்களின் நம்பிக்கை.

இதே போன்று கோவில்களில் நடைபெறும் சித்திரை-விஷு கனி காணல் நிகழ்ச்சியிலும் கனிக் கொன்றைப் பூக்கள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இந்நிகழ்ச்சிகளுக்காக பங்குனி மாத கடைசி நாளில் மக்கள் கனிக்கொன்றை மரங்களிலிருந்து மலர்கள் அனைத்தையும் பறித்துச் செல்கின்றனர்.

மருத்துவ குணம்

கனிக் கொன்றையின் வேர், தண்டு, இலை, பூக்கள் என அனைத்தும் மருத்துவ குணம் வாய்ந்தவையாகும். ஆயுர்வேத மருத்துவத்தில் கொன்றைப் பூக்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

குமரி மாவட்டத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் பல இடங்களில் இம்மரங்களில் மலர்கள் உதிர்ந்து வருவதையும் காணமுடிகிறது.


Next Story