போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் கோரிக்கைளை விரைந்து நிறைவேற்றுக - தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள்


போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் கோரிக்கைளை விரைந்து நிறைவேற்றுக - தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள்
x

போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.

சென்னை,

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்தில் மக்களுக்கு நிறைவாக சேவை செய்து வருகிறார்கள். அவர்கள் தங்களின் அடிப்படை கோரிக்கைகளுக்காக அரசு நிர்வாகத்துடன் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கண்டு வருகிறார்கள். தற்போது, ஊதிய ஒப்பந்தம் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பணப் பலன் சம்பந்தமாக போக்குவரத்துக் கழகத் தொழிற் சங்கங்கள் அரசு நிர்வாகத்துடன் நேரடியாகவும், கடிதம் மூலமாகவும் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான தீர்வும் ஏற்படவில்லை.

எனவே, 15 ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 2015 நவம்பர் முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பஞ்சப் படி உயர்வினை விடுவித்து, நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பணப் பலன்களை உடனே வழங்க வேண்டும். ஓய்வு பெறும் நாளன்றே பணப் பலன்கள் கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பணியின்போது இறந்த தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு உடனடியாக கல்வித் தகுதிக்கு ஏற்ப பணி வழங்க வேண்டும்.

போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளது. தொழிற் சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், தைத் திருநாளைக் கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படும். எனவே, பொதுமக்களின் நலன் கருதி, தமிழக அரசு தொழிசங்கங்களுடன் விரைந்து பேச்சுவார்த்தை நடத்தி, சுமூகத் தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story