அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு-அமைச்சரிடம் கோரிக்கை
முத்துப்பேட்டை பேரூராட்சியில் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அமைச்சர் கே.என்.நேருவிடம், பேரூராட்சி தலைவர் மனு அளித்தார்.
முத்துப்பேட்டை பேரூராட்சியில் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அமைச்சர் கே.என்.நேருவிடம், பேரூராட்சி தலைவர் மனு அளித்தார்.
பேரூராட்சி தலைவர் மனு
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் மும்தாஜ் நவாஸ் கான், துணைத் தலைவர் ஆறுமுக சிவக்குமார், நியமனக்குழு உறுப்பினர் சிவ.அய்யப்பன் மற்றும் கவுன்சிலர்கள் அதிராம்பட்டினம் அருகே நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அமைச்சர் கே.என். நேருவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:-
முத்துப்பேட்டை பேரூராட்சி அதிக மக்கள் தொகை கொண்ட பேரூராட்சியாகும். இங்கு தற்போது நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால் பல்வேறு மக்கள் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக நிரந்தர செயல் அலுவலரை நியமன செய்ய வேண்டும்.
நிதி ஒதுக்கீடு
முத்துப்பேட்டை பேரூராட்சி மிகவும் பின்தங்கிய பேரூராட்சி என்பதால் அதிக சிறப்பு கவனம் செலுத்தி போதிய நிதி ஒதுக்கீடு செய்து அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த பேரூராட்சியில் கிளார்க், வரி தண்டலர், சுகாதார மேற்பார்வையாளர், ஆய்வாளர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். இந்த பேரூராட்சி பகுதியில் சமீப காலமாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். இந்த பேரூராட்சி பகுதியில் நிரந்தர குப்பை கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இ்வ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் கே.என்.நேரு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததாக பேரூராட்சி தலைவர் மும்தாஜ் நவாஸ்கான் தெரிவித்தார்.