உடல் உறுப்பு தானம் செய்த விவசாயிக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு


உடல் உறுப்பு தானம் செய்த விவசாயிக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு
x

குறிஞ்சிப்பாடி அருகே உடல் உறுப்பு தானம் செய்த விவசாயிக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடந்தது. அவரது உடலுக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கடலூர்

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெத்தநாயக்கன்குப்பம் ஊராட்சி கஞ்சமநாதன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 34). விவசாயி. இவர் கடந்த 17-ந்தேதி ஏற்பட்ட விபத்தின் காரணமாக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதற்கிடையில் கிருஷ்ணகுமார் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது குடும்பத்தினர் கிருஷ்ணகுமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக தெரிவித்தனர். அதன்படி உரிய அரசு வழிகாட்டுதலின்படி அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. 2 சிறுநீரகம், கல்லீரல், கணையம் ஆகிய 4 உறுப்புகள் பெறப்பட்டு, 4 பேருக்கு பொருத்தப்பட்டது.

அரசு மரியாதை

தமிழக அரசு, ஏற்கனவே தன் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களை காப்போரின் தியாகத்தை போற்றிடும் வகையில் இறக்கும் முன் உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிசடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று உத்தரவிட்டதால், நேற்று மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், உடல் உறுப்பு தானம் செய்த கிருஷ்ணகுமார் வீட்டுக்கு நேரில் சென்று அரசு சார்பில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், நலப்பணிகள் இணை இயக்குனர் சாராசெலின்பால், தாசில்தார் சுரேஷ்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.


Next Story