குமரியில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்


குமரியில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்
x

குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொதுமக்கள் வீடுகள், பொது இடங்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொதுமக்கள் வீடுகள், பொது இடங்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.

விநாயகர் சதுர்த்தி

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி விநாயகர் கோவில்களில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு அபிஷேகம், தீபாராதனை மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இதனால் விநாயகர் கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

நாகர்கோவிலை பொறுத்த வரையில் மீனாட்சிபுரம் அற்புத விநாயகர் கோவில், கோட்டார் செட்டிநயினார் தேசிக விநாயகர் தேவஸ்தான கோவில், வடசேரி விஜய கணபதி கோவில் ஆகிய விநாயகர் கோவில்களில் பக்தி சொற்பொழிவு மற்றும் பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டன. மேலும் கோவில்களில் விநாயகருக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது.

சிலைகள் பிரதிஷ்டை

மேலும் பொதுமக்கள் அதிகாலையிலேயே எழுந்து நீராடி தங்களது வீட்டில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்தனர். பின்னர் விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து அவருக்கு பிடித்த அவல், பொரி மற்றும் கொழுக்கட்டை படைத்து வழிபட்டனர்.

இதே போல இந்து முன்னணி, அகில பாரத இந்து மகா சபா மற்றும் சிவசேனா ஆகிய இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களிலும், கோவில்களிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. வீடுகளில் சிறிய விநாயகர் சிலைகளும், பொது இடங்கள் மற்றும் கோவில்களில் 2 அடி முதல் 10 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அந்த வகையில் வீடுகள் மற்றும் பொது இடங்கள் உள்பட சுமார் 5 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

தக்கலை

தக்கலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சமய வகுப்பு மாணவ-மாணவிகளில் பஜனை ஊர்வலம் நடந்தது. இதில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.வேலாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர். குமரி மேற்கு மாவட்டத்தில் இந்து முன்னணி, சிவசேனா, இந்து மகாசபா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் 2500-க்கும் மேற்பட்ட சிலைகள் பொது இடங்கள், கோவில்களில் பூஜைக்கு வைக்கப்பட்டன.

ஆரல்வாய்மொழி

ஆரல்வாய்மொழி பகுதியில் வடக்கூர், சுப்பிரமணியபுரம், கணேசபுரம், வடக்கு பெருமாள்புரம் வெள்ளமடம் உள்ளிட்ட இடங்களில் இந்து மகாசபை மற்றும் இந்து முன்னணி சார்பில் 40-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த சிலைகளுக்கு தினமும் காலையிலும், மாலையிலும் பூஜை நடத்தப்படுகிறது. இந்து மகாசபை சார்பில் வைக்கப்பட்ட சிலைகள் 23-ந் தேதியும், இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட சிலைகள் 24-ந் தேதியும் ஊர்வலகமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும்.

நாகர்கோவிலை அடுத்த வெள்ளாடிச்சிவிளை செல்வ விநாயகர் கோவிலில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் குமரி மாவட்ட பா.ஜனதா பொருளாளரும், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவருமான முத்துராமன், பா.ஜனதா மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போலீஸ் பாதுகாப்பு

விநாயகர் சதுர்த்தியையொட்டி ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் சுமார் 1,200 போலீசார் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நேரில் சென்ற பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

-

1 More update

Next Story